Unnamed: 0
int64 0
1.34k
| Book
stringclasses 75
values | Chapter
stringlengths 25
48
| Content
stringlengths 252
17.1k
⌀ | Url
stringlengths 47
62
|
---|---|---|---|---|
0 | தொடக்கநூல் | தொடக்கநூல் அதிகாரம் – 1 – திருவிவிலியம் | கடவுள் உலகைப் படைத்தல்
1 தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது,
2 மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது.
3 அப்பொழுது கடவுள், “ஒளி தோன்றுக!” என்றார்; ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார்.
4 கடவுள் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார்.
5 கடவுள் ஒளிக்குப் ‘பகல்’ என்றும் இருளுக்கு ‘இரவு’ என்றும் பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று முதல் நாள் முடிந்தது.
6 அப்பொழுது கடவுள், “நீர்த்திரளுக்கு இடையில், வானம் தோன்றுக! அது நீரினின்று நீரைப் பிரிக்கட்டும்” என்றார்.
7 கடவுள் வானத்தை உருவாக்கி வானத்திற்குக் கீழுள்ள நீரையும் வானத்திற்கு மேலுள்ள நீரையும் பிரித்தார். அது அவ்வாறே ஆயிற்று.
8 கடவுள் வானத்திற்கு ‘விண்ணுலகம்’ என்று பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று இரண்டாம் நாள் முடிந்தது.
9 அப்பொழுது கடவுள், “விண்ணுலகுக்குக் கீழுள்ள நீர் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுசேர உலர்ந்த தரை தோன்றுக!” என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
10 கடவுள் உலர்ந்த தரைக்கு நிலம் என்றும் ஒன்றுதிரண்ட நீருக்குக் கடல் என்றும் பெயரிட்டார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.
11 அப்பொழுது கடவுள், “புற்பூண்டுகளையும் விதை தரும் செடிகளையும், கனி தரும் பழமரங்களையும் அந்த அந்த இனத்தின்படியே நிலம் விளைவிக்கட்டும்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
12 புற்பூண்டுகளையும் விதையைப் பிறப்பிக்கும் செடிகளையும் கனிதரும் மரங்களையும் அந்த அந்த இனத்தின்படி நிலம் விளைவித்தது. கடவுள் அது நல்லது என்று கண்டார்.
13 மாலையும், காலையும் நிறைவுற்று மூன்றாம் நாள் முடிந்தது.
14 அப்பொழுது கடவுள், “பகலையும் இரவையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் காலங்கள், நாள்கள், ஆண்டுகள் ஆகியவற்றைக் குறிப்பதற்கும் விண்விரிவினில் ஒளிப்பிழம்புகள் தோன்றுக!
15 அவை மண்ணுலகிற்கு ஒளிதர விண்விரிவினில் ஒளிப்பிழம்புகளாக இருக்கட்டும்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
16 கடவுள் இருபெரும் ஒளிப்பிழம்புகளை உருவாக்கினார். பகலை ஆள்வதற்குப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பையும் மற்றும் விண்மீன்களையும் அவர் உருவாக்கினார்.
17 கடவுள் மண்ணுலகிற்கு ஒளிதர விண்ணுலக வானத்தில் அவற்றை அமைத்தார்;
18 பகலையும் இரவையும் ஆள்வதற்கும் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் அவற்றை அமைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.
19 மாலையும் காலையும் நிறைவுற்று நான்காம் நாள் முடிந்தது.
20 அப்பொழுது கடவுள், “திரளான உயிரினங்களைத் தண்ணீர் தோற்றுவிப்பதாக! விண்ணுலக வானத்தில் நிலத்திற்கு மேலே பறவைகள் பறப்பனவாக!” என்றார்.
21 இவ்வாறு, கடலின் பெரும் பாம்புகளையும், திரள் திரளாக நீரில் நீந்திவாழும் உயிரினங்களையும், இறக்கையுள்ள எல்லாவிதப் பறவைகளையும் அவ்வவற்றின் இனத்தின்படி கடவுள் படைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.
22 கடவுள் அவற்றிற்கு ஆசி வழங்கி “பலுகிப் பெருகிக் கடல் நீரை நிரப்புங்கள். பறவைகளும் மண்ணுலகில் பெருகட்டும்” என்றுரைத்தார்.
23 மாலையும் காலையும் நிறைவுற்று, ஐந்தாம் நாள் முடிந்தது.
24 அப்பொழுது கடவுள், “கால்நடைகள், ஊர்வன, காட்டுவிலங்குகள் ஆகியவற்றை அவ்வவற்றின் இனத்தின்படி நிலம் தோற்றுவிப்பதாக” என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
25 கடவுள் காட்டு விலங்குகளையும் கால்நடைகளையும் நிலத்தில் ஊர்வன யாவற்றையும் அவ்வவற்றின் இனத்தின்படி உருவாக்கினார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.
26 அப்பொழுது கடவுள், “மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்” என்றார்.
27 கடவுள் தம் உருவில்
மானிடரைப்* படைத்தார்;
கடவுளின் உருவிலேயே
அவர்களைப் படைத்தார்;
ஆணும் பெண்ணுமாக
அவர்களைப் படைத்தார்.
28 கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, “பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்” என்றார்.
29 அப்பொழுது கடவுள், “மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்; இவை உங்களுக்கு உணவாகட்டும்.
30 எல்லாக் காட்டுவிலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் பசுமையான செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
31 கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன. மாலையும் காலையும் நிறைவுற்று ஆறாம் நாள் முடிந்தது.
1:3 2 கொரி 4:6.
1:6-8 2 பேது 3:5.
1:26 1 கொரி 11:7.
1:27 மத் 19:4; மாற் 10:6.
1:27-28 தொநூ 5:1-2.
1:27 * ‘ஆதாம்’ என்பது எபிரேய பாடம். | https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-1 |
1 | தொடக்கநூல் | தொடக்கநூல் அதிகாரம் – 2 – திருவிவிலியம் | 1 விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அமைப்புகள் அனைத்தும் உருவாக்கப் பெற்று நிறைவெய்தின.
2 மேலும், கடவுள் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் முடித்திருந்தார். அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச்செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்.
3 கடவுள் ஏழாம் நாளுக்கு ஆசி வழங்கி, அதைப் புனிதப்படுத்தினார். ஏனெனில், கடவுள் தாம் செய்த படைப்பு வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து அந்நாளில்தான் ஓய்ந்திருந்தார்.
4 இவையே விண்ணுலக, மண்ணுலகப் படைப்பின் தோற்ற முறைமையாம்.
ஆண்-பெண் படைப்பு
4 ஆண்டவராகிய கடவுள் மண்ணுலகையும், விண்ணுலகையும் உருவாக்கிய பொழுது,
5 மண்ணுலகில் நிலவெளியின் எவ்விதப் புதரும் தோன்றியிருக்கவில்லை; வயல்வெளியின் எவ்விதச் செடியும் முளைத்திருக்கவில்லை; ஏனெனில், ஆண்டவராகிய கடவுள் மண்ணுலகின்மேல் இன்னும் மழை பெய்விக்கவில்லை; மண்ணைப் பண்படுத்த மானிடர் எவரும் இருக்கவில்லை.
6 ஆனால், நிலத்திலிருந்து மூடுபனி எழும்பி நிலம் முழுவதையும் நனைத்தது.
7 அப்பொழுது ஆண்டவராகிய கடவுள் நிலத்தின்* மண்ணால்** மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்.
8 ஆண்டவராகிய கடவுள் கிழக்கே இருந்த ஏதேனில் ஒரு தோட்டம் அமைத்துத் தாம் உருவாக்கிய மனிதனை அங்கே வைத்தார்.
9 ஆண்டவராகிய கடவுள் கண்ணுக்கு அழகானதும் உண்பதற்குச் சுவையானதுமான எல்லா வகை மரங்களையும், தோட்டத்தின் நடுவில் வாழ்வின் மரத்தையும் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்தையும் மண்ணிலிருந்து வளரச் செய்தார்.
10 தோட்டத்திற்குள் நீர் பாய்வதற்காக ஏதேனிலிருந்து ஆறு ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. அது அங்கிருந்து பிரிந்து நான்கு சிறப்புமிகு ஆறுகள் ஆயிற்று.
11 முதலாவதன் பெயர் பீசோன். இது கவீலா நாடு முழுவதும் வளைந்து ஓடுகின்றது. அங்கே பொன் விளையும்.
12 அந்நாட்டுப் பொன் பசும்பொன். அங்கே நறுமணப் பொருள்களும் வண்ண மணிக்கற்களும் உண்டு.
13 இரண்டாவது ஆற்றின் பெயர் கீகோன். இது எத்தியோப்பியா நாடு முழவதும் வளைந்து ஓடுகின்றது.
14 மூன்றாவது ஆற்றின் பெயர் திக்ரீசு. இது அசீரியாவிற்குக் கிழக்கே, ஓடுகின்றது. நான்காவது ஆறு யூப்பிரத்தீசு.
15 ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும் பாதுகாக்கவும் ஆண்டவராகிய கடவுள் மனிதனை அங்கு கொண்டுவந்து குடியிருக்கச் செய்தார்.
16 ஆண்டவராகிய கடவுள் மனிதனிடம், “தோட்டத்தில் இருக்கும் எந்த மரத்திலிருந்தும் உன் விருப்பம் போல் நீ உண்ணலாம்.
17 ஆனால், நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே; ஏனெனில், அதிலிருந்து நீ உண்ணும் நாளில் சாகவே சாவாய்” என்று கட்டளையிட்டுச் சொன்னார்.
18 பின்பு, ஆண்டவராகிய கடவுள், “மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்” என்றார்.
19 ஆண்டவராகிய கடவுள் மண்ணிலிருந்து எல்லாக் காட்டு விலங்குகளையும் வானத்துப் பறவைகளையும் உருவாக்கி, அவற்றிற்கு மனிதன் என்ன பெயரிடுவான் என்று பார்க்க, அவற்றை அவனிடம் கொண்டு வந்தார். உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் அவன் என்ன பெயரிட்டானோ அதுவே அதன் பெயராயிற்று.
20 கால்நடைகள், வானத்துப் பறவைகள், காட்டு விலங்குகள் ஆகிய எல்லாவற்றிற்கும் மனிதன் பெயரிட்டான்; தனக்குத் தகுந்த துணையையோ மனிதன் காணவில்லை.
21 ஆகவே, ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச்செய்து, அவன் உறங்கும் பொழுது அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, எடுத்த இடத்தைச் சதையால் அடைத்தார்.
22 ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதனிடமிருந்து எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்துவந்தார்.
23 அப்பொழுது மனிதன்,
“இதோ! இவளே என் எலும்பின் எலும்பும்
சதையின் சதையும் ஆனவள்;
ஆணிடமிருந்து* எடுக்கப்பட்டதால்,
இவள் பெண்** என்று
அழைக்கப்படுவாள்” என்றான்.
24 இதனால், கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.
25 மனிதன், அவன் மனைவி ஆகிய இருவரும் ஆடையின்றி இருந்தனர். ஆனால், அவர்கள் வெட்கப்படவில்லை.
2:2 எபி 4:4,10.
2:2-3 விப 20:11.
2:7 1 கொரி 15:45.
2:9 திவெ 2:7; 22:2-14.
2:24 மத் 19:5; மாற் 10:7-8; 1 கொரி 6:16; எபே 5:31.
2:7 * ‘ஆதாமா’ என்பது எபிரேய பாடம். ‘ஆதாமா’ என்பதற்கு ‘மண்’ என்பது பொருள்.
2:7 ** ‘ஆதாம்’ என்பது எபிரேய பாடம். ‘ஆதாம்’ என்பதற்கு ‘மண்ணால் ஆனவன்’ என்பது பொருள்.
2:23 * எபிரேயத்தில், ‘ஈஷ்’ என்பது ‘ஆண்’ எனவும், ‘ஈஷா’ என்பது ‘பெண்’ எனவும் பொருள்படும். | https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-2 |
2 | தொடக்கநூல் | தொடக்கநூல் அதிகாரம் – 3 – திருவிவிலியம் | மனிதனின் கீழ்ப்படியாமை
1 ஆண்டவராகிய கடவுள் உருவாக்கிய காட்டு விலங்குகளிலெல்லாம் பாம்பு மிகவும் சூழ்ச்சிமிக்கதாக இருந்தது. அது பெண்ணிடம், “கடவுள் உங்களிடம் தோட்டத்திலுள்ள எல்லா மரங்களிலிருந்தும் உண்ணக்கூடாது என்றது உண்மையா?” என்று கேட்டது.
2 பெண் பாம்பிடம், “தோட்டத்தில் இருக்கும் மரங்களின் பழங்களை நாங்கள் உண்ணலாம்.
3 ஆனால், ‘தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக்கூடாது; அதைத் தொடவும் கூடாது. மீறினால் நீங்கள் சாவீர்கள்’ என்று கடவுள் சொன்னார்,” என்றாள்.
4 பாம்பு பெண்ணிடம், “நீங்கள் சாகவே மாட்டீர்கள்;
5 ஏனெனில், நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும்” என்றது.
6 அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும் கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு, பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள். அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் உண்டான்.
7 அப்பொழுது அவர்கள் இருவரின் கண்களும் திறக்கப்பட்டன; அவர்கள் தாங்கள் ஆடையின்றி இருப்பதை அறிந்தனர். ஆகவே, அத்தி இலைகளைத் தைத்துத் தங்களுக்கு ஆடைகளைச் செய்துகொண்டனர்.
8 மென்காற்று வீசிய பொழுதினிலே, தோட்டத்தில் ஆண்டவராகிய கடவுள் உலவிக்கொண்டிருந்த ஓசை கேட்டு, மனிதனும் அவன் மனைவியும் ஆண்டவராகிய கடவுளின் திருமுன்னிருந்து விலகி, தோட்டத்தின் மரங்களுக்கு இடையே ஒளிந்து கொண்டனர்.
9 ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, “நீ எங்கே இருக்கின்றாய்?” என்று கேட்டார்.
10 “உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்” என்றான் மனிதன்.
11 “நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?” என்று கேட்டார்.
12 அப்பொழுது அவன், “என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்; நானும் உண்டேன்” என்றான்.
13 ஆண்டவராகிய கடவுள், “நீ ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், “பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்” என்றாள்.
கடவுளின் தீர்ப்பும் வாக்குறுதியும்
14 ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம்,
“நீ இவ்வாறு செய்ததால்,
கால்நடைகள், காட்டுவிலங்குகள்
அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய்.
உன் வயிற்றினால் ஊர்ந்து
உன் வாழ்நாள் எல்லாம்
புழுதியைத் தின்பாய்.
15 உனக்கும் பெண்ணுக்கும்,
உன் வித்துக்கும் அவள் வித்துக்கும்
பகையை உண்டாக்குவேன்.
அவள் வித்து உன் தலையைக்
காயப்படுத்தும்.
நீ அதன் குதிங்காலைக்
காயப்படுத்துவாய்” என்றார்.
16 அவர் பெண்ணிடம்,
“உன் மகப்பேற்றின் வேதனையை
மிகுதியாக்குவேன்;
வேதனையில் நீ குழந்தைகள்
பெறுவாய்.
ஆயினும் உன் கணவன்மேல்
நீ வேட்கைகொள்வாய்;
அவனோ உன்னை ஆள்வான்”
என்றார்.
17 அவர் மனிதனிடம்,
“உன் மனைவியின் சொல்லைக்
கேட்டு, உண்ணக்கூடாது என்று
நான் கட்டளையிட்டு விலக்கிய
மரத்திலிருந்து நீ உண்டதால்
உன் பொருட்டு நிலம்
சபிக்கப்பட்டுள்ளது;
உன் வாழ்நாளெல்லாம் வருந்தி அதன்
பயனை உழைத்து நீ உண்பாய்.
18 முட்செடியையும் முட்புதரையும்
உனக்கு அது முளைப்பிக்கும்.
வயல் வெளிப் பயிர்களை நீ உண்பாய்.
19 நீ மண்ணிலிருந்து
உருவாக்கப்பட்டதால்
அதற்குத் திரும்பும்வரை
நெற்றி வியர்வை நிலத்தில் விழ
உழைத்து உன் உணவை உண்பாய்.
நீ மண்ணாய் இருக்கிறாய்;
மண்ணுக்கே திரும்புவாய்” என்றார்.
20 மனிதன் தன் மனைவிக்கு ‘ஏவாள்’ என்று பெயரிட்டான்; ஏனெனில், உயிருள்ளோர் எல்லோருக்கும் அவளே தாய்.
21 ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கும் அவன் மனைவிக்கும் தோல் ஆடைகள் செய்து அவர்கள் அணியச் செய்தார்.
22 பின்பு, ஆண்டவராகிய கடவுள், “மனிதன் இப்பொழுது நம்முள் ஒருவர் போல் நன்மை தீமை அறிந்தவன் ஆகிவிட்டான். இனி அவன் என்றென்றும் வாழ்வதற்காக, வாழ்வின் மரத்திலிருந்தும் பறித்து உண்ணக் கையை நீட்டிவிடக் கூடாது” என்றார்.
23 எனவே, ஆண்டவராகிய கடவுள் அவன் உருவாக்கப்பட்ட அதே மண்ணைப் பண்படுத்த அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பி விட்டார்.
24 இவ்வாறாக, அவர் மனிதனை வெளியே துரத்திவிட்டார். ஏதேன் தோட்டத்திற்குக் கிழக்கே வாழ்வின் மரத்திற்குச் செல்லும் வழியைக் காப்பதற்குக் கெருபுகளையும் சுற்றிச் சுழலும் சுடரொளி வாளையும் வைத்தார்.
3:22 திவெ 22:14. | https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-3 |
3 | தொடக்கநூல் | தொடக்கநூல் அதிகாரம் – 4 – திருவிவிலியம் | காயினும் ஆபேலும்
1 ஆதாம் தன் மனைவி ஏவாளுடன் கூடி வாழ்ந்தான். அவள் கருவுற்றுக் காயினைப் பெற்றெடுத்தாள். அவள் “ஆண்டவர் அருளால் ஆண் மகன் ஒருவனை நான் பெற்றுள்ளேன்” என்றாள்.
2 பின்பு, அவள் அவன் சகோதரன் ஆபேலைப் பெற்றெடுத்தாள். ஆபேல் ஆடு மேய்ப்பவன் ஆனான். காயின் நிலத்தைப் பண்படுத்துபவன் ஆனான்.
3 சில நாள்கள் சென்றன. காயின் நிலத்தின் பலனிலிருந்து ஆண்டவருக்குக் காணிக்கை கொண்டு வந்தான்.
4 ஆபேலும் தன் மந்தையிலிருந்து கொழுத்த தலையீறுகளைக் கொண்டு வந்தான். ஆண்டவர் ஆபேலையும் அவன் காணிக்கையையும் கனிவுடன் கண்ணோக்கினார்.
5 ஆனால், காயினையும் அவன் காணிக்கையையும் அவர் கனிவுடன் கண்ணோக்கவில்லை. ஆகவே, காயின் கடுஞ்சினமுற்றான். அவன் முகம் வாடியது.
6 ஆகவே, ஆண்டவர் காயினிடம், “நீ ஏன் சினமுற்றிருக்கிறாய்? உன் முகம் வாடி இருப்பது ஏன்?
7 நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா? நீ நல்லது செய்யாவிட்டால், பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை அடக்கி ஆளவேண்டும்” என்றார்.
8 காயின் தன் சகோதரன் ஆபேலிடம், “நாம் வயல்வெளிக்குப் போவோம்” என்றான். அவர்கள் வெளியில் இருந்தபொழுது, காயின் தன் சகோதரன் ஆபேலின் மேல் பாய்ந்து அவனைக் கொன்றான்.
9 ஆண்டவர் காயினிடம், “உன் சகோதரன் ஆபேல் எங்கே?” என்று கேட்டார். அதற்கு அவன், “எனக்குத் தெரியாது. நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?” என்றான்.
10 அதற்கு ஆண்டவர், “நீ என்ன செய்துவிட்டாய்! உன் சகோதரனின் இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து என்னை நோக்கிக் கதறிக் கொண்டிருக்கிறது.
11 இப்பொழுது, உன் கைகள் சிந்திய உன் சகோதரனின் இரத்தத்தைத் தன் வாய்திறந்து குடித்த மண்ணை முன்னிட்டு, நீ சபிக்கப்பட்டிருக்கின்றாய்.
12 நீ மண்ணில் பயிரிடும் பொழுது அது இனிமேல் உனக்குப் பலன் தராது. மண்ணுலகில் நீ நாடோடியாக அலைந்து திரிவாய்” என்றார்.
13 காயின் ஆண்டவரிடம், “எனக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை என்னால் தாங்க முடியாததாக இருக்கின்றது.
14 இன்று நீர் என்னை இம்மண்ணிலிருந்து துரத்தியிருக்கின்றீர்; உமது முன்னிலையினின்று நான் மறைக்கப்பட்டுள்ளேன். மண்ணுலகில் நான் நாடோடியாக அலைந்து திரிய வேண்டியுள்ளது. என்னைக் காண்கின்ற எவனும் என்னைக் கொல்வானே!” என்றான்.
15 ஆண்டவர் அவனிடம் “அப்படியன்று; காயினைக் கொல்கின்ற எவனும் ஏழு முறை பழி வாங்கப்படுவான்” என்று சொல்லி, காயினைக் கண்டு பிடிக்கும் எவனும் அவனைக் கொல்லாமல் இருக்க ஆண்டவர் அவன் மேல் ஓர் அடையாளம் இட்டார்.
16 பின்னர், காயின் ஆண்டவர் திருமுன்னை விட்டுச் சென்று ஏதேனுக்குக் கிழக்கே இருந்த நோது நாட்டில் குடியேறினான்.
காயினின் வழிமரபினர்
17 காயின் தன் மனைவியுடன் கூடி வாழ, அவளும் கருவுற்று ஏனோக்கைப் பெற்றெடுத்தாள். அப்பொழுது காயின் ஒரு நகரத்தை நிறுவி, அதற்குத் தன் மகன் ஏனோக்கின் பெயரை வைத்தான்.
18 ஏனோக்கிற்கு ஈராது பிறந்தான். ஈராதுக்கு மெகுயாவேல் பிறந்தான். மெகுயாவேலுக்கு மெத்துசாவேல் பிறந்தான். மெத்துசாவேலுக்கு இலாமேக்கு பிறந்தான்.
19 இலாமேக்கு இரு பெண்களை மணந்துகொண்டான். ஒருத்தியின் பெயர் ஆதா; மற்றொருத்தியின் பெயர் சில்லா.
20 ஆதா யாபாலைப் பெற்றெடுத்தாள். இவன்தான் ஆடுமாடு மேய்த்துக் கூடாரத்தில் வாழும் மக்களின் தந்தை.
21 அவன் சகோதரன் பெயர் யூபால். இவன்தான் யாழ் மீட்டுவோர், குழல் ஊதுவோர் ஆகியோர் அனைவரின் தந்தை.
22 சில்லா தூபால்காயினைப் பெற்றெடுத்தாள். இவன் வெண்கலத்தாலும், இரும்பாலும் எல்லாவிதமான கருவிகள் செய்யும் கொல்லன் ஆனான். தூபால்காயினுக்கு நாகமா என்ற சகோதரி இருந்தாள்.
23 இலாமேக்கு தன் மனைவியரிடம், “ஆதா, சில்லா, நான் சொல்வதைக் கவனியுங்கள். இலாமேக்கின் மனைவியரே, என் சொல்லுக்குச் செவிகொடுங்கள்; என்னைக் காயப்படுத்தியதற்காக ஒருவனை நான் கொன்று விட்டேன்; என்னை அடித்ததற்காக அந்த இளைஞனை நான் கொன்றேன்.
24 காயினுக்காக ஏழுமுறை பழிவாங்கப்பட்டால் இலாமேக்கிற்காக எழுபது – ஏழுமுறை பழிவாங்கப்படும்” என்றான்.
25 ஆதாம் மீண்டும் தன் மனைவியுடன் கூடி வாழ, அவளும் மகன் ஒருவனைப் பெற்று அவனுக்குச் சேத்து* என்று பெயரிட்டாள். “காயின் ஆபேலைக் கொன்றதால் அவனுடைய இடத்தில் இன்னொருவனைக் கடவுள் வைத்தருளினார்” என்றாள்.
26 சேத்துக்கும் மகன் ஒருவன் பிறந்தான்; அவனுக்கு அவன் ஏனோசு என்று பெயரிட்டான். அப்பொழுதே ‘ஆண்டவர்’ என்னும் திருப்பெயரால் அவரை வழிபடலாயினர்.
4:4 எபி 11:4.
4:8 மத் 23:35; லூக் 11:51; 1 யோவா 3:12.
4:10 எபி 12:24.
4:24 மத் 18:22.
4:8 இச்சொற்றொடர் மிகப் பழமையான பதிப்புகளில் உள்ளது.
4:25 எபிரேயத்தில், ‘வைத்தல்’ என்பது பொருள். | https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-4 |
4 | தொடக்கநூல் | தொடக்கநூல் அதிகாரம் – 5 – திருவிவிலியம் | ஆதாமின் வழிமரபினர்
(1 குறி 1:1-4)
1 ஆதாமின் வழிமரபின் அட்டவணை பின்வருமாறு: கடவுள் மனிதரைப் படைத்தபொழுது அவர்களைத் தம் சாயலில் உருவாக்கினார்.
2 ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். அவர்களைப் படைத்த நாளில் அவர்களுக்கு ஆசி வழங்கி, ‘மனிதர்’ என்று பெயரிட்டார்.
3 ஆதாமுக்கு நூற்று முப்பது வயதானபோது, அவனுக்கு அவன் சாயலிலும் உருவிலும் மகன் ஒருவன் பிறந்தான்; அவனுக்குச் சேத்து என்று பெயரிட்டான்.
4 சேத்து பிறந்தபின் ஆதாம் எண்ணூறு ஆண்டுகள் வாழ்ந்தான். ஆதாமுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
5 மொத்தம் தொள்ளாயிரத்து முப்பது ஆண்டுகள் வாழ்ந்தபின் ஆதாம் இறந்தான்.
6 சேத்துக்கு நூற்றைந்து வயதானபோது அவனுக்கு ஏனோசு பிறந்தான்.
7 ஏனோசு பிறந்தபின் சேத்து எண்ணூற்று ஏழு ஆண்டுகள் வாழ்ந்தான். சேத்துக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
8 மொத்தம் தொள்ளாயிரத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் வாழ்ந்தபின் சேத்து இறந்தான்.
9 ஏனோசுக்குத் தொண்ணூறு வயதானபோது அவனுக்குக் கேனான் பிறந்தான்.
10 கேனான் பிறந்தபின் ஏனோசு எண்ணூற்றுப் பதினைந்து ஆண்டுகள் வாழ்ந்தான். கேனானுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
11 மொத்தம் தொள்ளாயிரத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தபின் ஏனோசு இறந்தான்.
12 கேனானுக்கு எழுபது வயதான போது, அவனுக்கு மகலலேல் பிறந்தான்.
13 மகலலேல் பிறந்த பின் கேனான் எண்ணூற்று நாற்பது ஆண்டுகள் வாழ்ந்தான். கேனானுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
14 மொத்தம் தொள்ளாயிரத்துப் பத்து ஆண்டுகள் வாழ்ந்த பின் கேனான் இறந்தான்.
15 மகலலேலுக்கு அறுபத்தைந்து வயதானபோது, அவனுக்கு எரேது பிறந்தான்.
16 எரேது பிறந்தபின் மகலலேல் எண்ணூற்று முப்பது ஆண்டுகள் வாழ்ந்தான். மகலலேலுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
17 மொத்தம் எண்ணூற்றுத் தொண்ணூற்றைந்து ஆண்டுகள் வாழ்ந்த பின் மகலலேல் இறந்தான்.
18 எரேதுக்கு நூற்று அறுபத்திரண்டு வயதானபோது, அவனுக்கு ஏனோக்கு பிறந்தான்.
19 ஏனோக்கு பிறந்தபின் எரேது எண்ணூறு ஆண்டுகள் வாழ்ந்தான். எரேதுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
20 மொத்தம் தொள்ளாயிரத்து அறுபத்திரண்டு ஆண்டுகள் வாழ்ந்த பின் எரேது இறந்தான்.
21 ஏனோக்குக்கு அறுபத்தைந்து வயதானபோது, அவனுக்கு மெத்துசேலா பிறந்தான்.
22 மெத்துசேலா பிறந்தபின், ஏனோக்கு முந்நூறு ஆண்டுகள் கடவுளோடு நடந்தான். ஏனோக்கிற்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
23 ஏனோக்கு மொத்தம் முந்நூற்று அறுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தான்.
24 ஏனோக்கு கடவுளோடு நடந்து கொண்டிருந்தான். பின்பு அவனைக் காணவில்லை. ஏனெனில் கடவுள் அவனை எடுத்துக்கொண்டார்.
25 மெத்துசேலாவுக்கு நூற்று எண்பத்தேழு வயதானபோது அவனுக்கு இலாமேக்கு பிறந்தான்.
26 இலாமேக்கு பிறந்தபின், மெத்துசேலா எழுநூற்று எண்பத்திரண்டு ஆண்டுகள் வாழ்ந்தான். மெத்துசேலாவுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
27 மெத்துசேலா மொத்தம் தொள்ளாயிரத்து அறுபத்தொன்பது ஆண்டுகள் வாழ்ந்தபின் இறந்தான்.
28 இலாமேக்கிற்கு நூற்று எண்பத்திரண்டு வயதானபோது, அவனுக்கு மகன் ஒருவன் பிறந்தான்.
29 அவன் “ஆண்டவரின் சாபத்திற்குள்ளான மண்ணில் நமக்கு உண்டான கடின வேலையிலும் உழைப்பிலும் நமக்கு ஆறுதல் அளிப்பான்” என்று சொல்லி அவனுக்கு ‘நோவா’* என்று பெயரிட்டான்.
30 நோவா பிறந்தபின் இலாமேக்கு ஐந்நூற்றுத்தொண்ணூற்றைந்து ஆண்டுகள் வாழ்ந்தான். இலாமேக்கிற்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
31 இலாமேக்கு மொத்தம் எழுநூற்று எழுபத்தேழு ஆண்டுகள் வாழ்ந்தபின் இறந்தான்.
32 நோவாவிற்கு ஐந்நூறு வயதானபோது, அவருக்குச் சேம், காம், எப்பேத்து ஆகியோர் பிறந்தனர்.
5:1-2 தொநூ 1:27-28.
5:2 மத் 19:4; மாற் 10:6.
5:24 எபி 11:5; யூதா 14.
5:29 எபிரேயத்தில், ‘ஆறுதல்’ என்பது பொருள். | https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-5 |
5 | தொடக்கநூல் | தொடக்கநூல் அதிகாரம் – 6 – திருவிவிலியம் | மனிதரின் தீச்செயல்
1 மண்ணில் மனிதர் பெருகத் தொடங்கி, அவர்களுக்குப் புதல்வியர் பிறந்தபொழுது,
2 மனிதரின் புதல்வியர் அழகாக இருப்பதைத் தெய்வப் புதல்வர் கண்டு, தாங்கள் தேர்ந்து கொண்டவர்களையெல்லாம் மனைவியர் ஆக்கிக்கொண்டனர்.
3 அப்பொழுது ஆண்டவர், “என் ஆவி தவறிழைக்கும் மனிதனில் என்றென்றும் தங்கப் போவதில்லை. அவன் வெறும் சதைதானே! இனி அவன் நூற்றிருபது ஆண்டுகளே வாழ்வான்” என்றார்.
4 தெய்வப் புதல்வர் மனிதரின் புதல்வியருடன் சேர்ந்து அவர்களுக்குக் குழந்தைகள் பிறக்க, அக்காலத்திலும் அதற்குப் பின்னரும் மண்ணுலகில் அரக்கர் இருந்தனர். அவர்களே பெயர் பெற்ற பழங்காலப் பெருவீரர்கள் ஆவர்.
5 மண்ணுலகில் மனிதர் செய்யும் தீமை பெருகுவதையும் அவர்களின் இதயச் சிந்தனைகளெல்லாம் நாள் முழுவதும் தீமையையே உருவாக்குவதையும் ஆண்டவர் கண்டார்.
6 மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்தது.
7 அப்பொழுது ஆண்டவர், “நான் படைத்த மனிதரை மண்ணிலிருந்து அழித்தொழிப்பேன். மனிதர்முதல் கால்நடைகள், ஊர்வன, வானத்துப் பறவைகள்வரை அனைத்தையும் அழிப்பேன். ஏனெனில், இவற்றை உருவாக்கியதற்காக நான் மனம் வருந்துகிறேன்” என்றார்.
8 ஆனால், நோவாவுக்கு ஆண்டவரின் அருள் பார்வை கிடைத்தது.
நோவா
9 நோவானின் வழி மரபினர் இவர்களே: தம் காலத்தவருள் நோவா நேர்மையானவராகவும், குற்றமற்றவராகவும் இருந்தார். நோவா கடவுளோடு நடந்தார்.
10 நோவாவிற்கு சேம், காம், எப்பேத்து என்னும் மூன்று புதல்வர் பிறந்தனர்.
11 அப்பொழுது கடவுள் முன்னிலையில் மண்ணுலகு சீர்கெட்டிருந்தது, பூவுலகு வன்முறையால் நிறைந்திருந்தது.
12 கடவுள் மண்ணுலகை உற்று நோக்கினார். இதோ! அது சீர்கெட்டுப் போயிருந்தது. மண்ணுலகில் ஒவ்வொருவரும் தீய வழியில் நடந்துவந்தனர்.
13 அப்பொழுது கடவுள் நோவாவிடம் பின்வருமாறு கூறினார்: “எனது முன்னிலையிலிருந்து மனிதர் எல்லாரையும் ஒழித்துவிடப்போகிறேன். ஏனெனில், அவர்களால் மண்ணுலகில் வன்முறை நிறைந்திருக்கின்றது. இப்பொழுது நான் அவர்களை மண்ணுலகோடு அழிக்கப் போகிறேன்.
14 உனக்காகக் கோபர் மரத்தால் ஒரு பேழை செய்; அதில் அறைகள் அமைத்து அதற்கு உள்ளேயும் வெளியேயும் கீல் பூசு.
15 பேழையை நீ செய்யவேண்டிய முறையாவது; நீளம் முந்நூறு முழம்; அகலம் ஐம்பது முழம்; உயரம் முப்பது முழம்.
16 பேழைக்குமேல் கூரை அமைத்து அந்தக் கூரை பேழைக்கு ஒரு முழம் வெளியே தாழ்வாக இருக்கும்படி கட்டி முடி; பேழையின் கதவை ஒரு பக்கத்தில் அமை. பேழையில் கீழ்த்தளம், நடுத்தளம், மேல்தளம் என மூன்று தளங்கள் அமை.
17 நானோ, வானுலகின்கீழ் உயிருள்ள எல்லாவற்றையும் அழிப்பதற்காக மண்ணுலகின் மேல் வெள்ளப்பெருக்கு வரச் செய்வேன். மண்ணுலகில் உள்ளவையெல்லாம் மடிந்துபோம்.
18 உன்னுடனோ, என் உடன்படிக்கையை நிலைநாட்டுவேன். உன் புதல்வர், உன் மனைவி, உன் புதல்வரின் மனைவியர் ஆகியோருடன் நீ பேழைக்குள் செல்.
19 உன்னுடன் உயிர் பிழைத்துக்கொள்ளுமாறு, சதையுள்ள எல்லா உயிரினங்களிலிருந்தும் வகைக்கு இரண்டைப் பேழைக்குள் கொண்டு வா. அவை ஆணும் பெண்ணுமாக இருக்கட்டும்.
20 வகை வகையான பறவைகள், கால்நடைகள், நிலத்தில் ஊர்வன ஆகியவற்றிலிருந்து வகைக்கு இரண்டு உயிர் பிழைத்துக்கொள்ள உன்னிடம் வரட்டும்.
21 உண்பதற்கான எல்லா வகை உணவுப் பொருள்களையும் நீ எடுத்துச் சென்று சேர்த்து வைத்துக்கொள். அவை உனக்கும் அவற்றிற்கும் உணவாகட்டும்.”
22 கடவுள் தமக்குக் கட்டளையிட்டபடியே நோவா எல்லாவற்றையும் செய்து முடித்தார்.
6:1-4 யோபு 1:6; 2:1.
6:4 எண் 13:33.
6:5-8 மத் 24:37; லூக் 17:26; 1 பேது 3:20.
6:9 2 பேது 2:5.
6:22 எபி 11:7. | https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-6 |
6 | தொடக்கநூல் | தொடக்கநூல் அதிகாரம் – 7 – திருவிவிலியம் | வெள்ளப்பெருக்கு
1 அப்பொழுது ஆண்டவர் நோவாவிற்குக் கூறியது: “நீ உன் குடும்பத்தார் அனைவரோடும் பேழைக்குள் செல். ஏனெனில், இத்தலைமுறையில் உன்னையே நான் நேர்மையானவனாகக் காண்கிறேன்.
2 தக்க விலங்குகள் எல்லாவற்றிலிருந்தும் ஆணும் பெண்ணுமாக ஏழு சோடிகளையும், தகாத விலங்குகளிலிருந்து ஆணும் பெண்ணுமாக ஒரு சோடியையும்.
3 வானத்துப் பறவைகளிலிருந்து ஆணும் பெண்ணுமாக ஏழு சோடிகளையும் மண்ணுலகெங்கும் அவற்றின் இனங்கள் உயிர் பிழைத்துக் கொள்வதற்காக உன்னுடன் சேர்த்துக் கொள்.
4 ஏனெனில், இன்னும் ஏழு நாள்களில் மண்ணுலகின்மேல் நாற்பது பகலும் நாற்பது இரவும் நான் மழை பெய்விக்கப்போகிறேன். நான் உருவாக்கிய உயிரினங்களை எல்லாம் இந்த நிலத்திலிருந்து அழித்தொழிப்பேன்.”
5 ஆண்டவர் கட்டளையிட்டபடியே நோவா எல்லாவற்றையும் செய்தார்.
6 மண்ணுலகில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது நோவாவிற்கு வயது அறுநூறு.
7 வெள்ளப்பெருக்கிலிருந்து தப்புவதற்காக நோவா தம் புதல்வர், மனைவி, புதல்வரின் மனைவியர் ஆகியோருடன் பேழைக்குள் சென்றார்.
8 தக்க விலங்குகள், தகாத விலங்குகள், பறவைகள், நிலத்தில் ஊர்வன அனைத்தும்
9 சோடி சோடியாக, ஆணும் பெண்ணுமாக, நோவாவுடன் கடவுள் அவருக்குக் கட்டளையிட்டபடி பேழைக்குள் சென்றன.
10 ஏழு நாள்களுக்குப்பின் மண்ணுலகில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
11 நோவாவின் வாழ்க்கையின் அறுநூறாம் ஆண்டின் இரண்டாம் மாதத்தில் பதினேழாம் நாளன்று பேராழத்தின் ஊற்றுகள் எல்லாம் பீறிட்டெழுந்தன. வானங்களின் மதகுகள் திறக்கப்பட்டன.
12 நாற்பது பகலும் நாற்பது இரவும் மண்ணுலகில் பெரு மழை பெய்தது.
13 நோவா தம் புதல்வர் சேம், காம், எப்பேத்து, தம் மனைவி, தம் புதல்வர் மூவரின் மனைவியர் ஆகியோருடன் அன்றே பேழைக்குள் நுழைந்தார்.
14 அவர்களும் அவர்களுடன் எல்லாவகைக் காட்டு விலங்குகளும், கால்நடைகளும், நிலத்தில் ஊர்வனவும், பறவைகளும், இறக்கைகளையுடைய யாவும்,
15 உயிருள்ள அனைத்தும் சோடி சோடியாக நோவாவிடம் பேழைக்குள் சென்றன.
16 கடவுள் அவருக்குக் கட்டளையிட்டபடி உள்ளே சென்றவை எல்லாம் ஒவ்வோர் உயிரினத்திலும் ஆணும் பெண்ணுமாக உள்ளே சென்றன. அதன் பின் ஆண்டவர் அவரை உள்ளே விட்டுக் கதவை மூடினார்.
17 நாற்பது நாள்களாகப் பெரு வெள்ளம் மண்ணுலகில் வந்து கொண்டிருந்தது. வெள்ளம் பெருக்கெடுத்துப் பேழையைத் தூக்க, அது நிலத்திலிருந்து உயர்ந்து எழுந்தது.
18 மண்ணுலகின் மேல் வெள்ளம் பாய்ந்து மிகுதியாகப் பெருக்கெடுக்க, பேழை நீரின்மேல் மிதந்தது.
19 மண்ணுலகில் வெள்ளம் பாய்ந்து பெருகப்பெருக வானத்தின்கீழ் எங்கும் இருந்த உயர்ந்த மலைகள் எல்லாம் நீரில் மூழ்கின.
20 மூழ்கிய மலைகளுக்குமேல் நீர் மட்டம் பதினைந்து முழம் உயர்ந்திருந்தது.
21 நிலத்தில் ஊர்வன, பறவைகள், கால்நடைகள், காட்டு விலங்குகள், நிலத்தில் தவழ்வன, மனிதர் அனைவர் ஆகிய சதையுள்ள உயிரினங்கள் அனைத்தும் மாண்டன.
22 தரையில் வாழ்ந்தவற்றில் நாசியால் மூச்சுவிடும் அனைத்தும் செத்துப் போயின.
23 மனிதர் முதல் விலங்குகள், ஊர்வன, வானத்துப் பறவைகள் ஈறாக மண்ணில் உயிர் வாழ்ந்த அனைத்தும் அழிந்தன. அவை மண்ணுலகில் இராதபடி ஒழிக்கப்பட்டன. நோவாவும் அவருடன் பேழையில் இருந்தவர்களுமே எஞ்சியிருந்தனர்.
24 நூற்றைம்பது நாள்களாக மண்ணுலகில் வெள்ளம் பாய்ந்து பெருகிற்று.
7:7 மத் 24:38-39; லூக் 17:27.
7:11 2 பேது 3:6. | https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-7 |
7 | தொடக்கநூல் | தொடக்கநூல் அதிகாரம் – 8 – திருவிவிலியம் | வெள்ளப்பெருக்கின் முடிவு
1 கடவுள் நோவாவையும் அவருடன் பேழைக்குள் இருந்த எல்லாக் காட்டு விலங்குகள், கால் நடைகள் அனைத்தையும் நினைவு கூர்ந்தார். ஆகவே, மண்ணுலகின் மீது காற்று வீசச் செய்தார்; வெள்ளம் தணியத் தொடங்கியது.
2 பேராழத்தின் ஊற்றுகளும், வானங்களின் மதகுகளும் மூடப்பட்டன; வானத்திலிருந்து மழை பெய்வது நின்றது.
3 மண்ணுலகில் வெள்ளம் வற்றிக் குறைந்துகொண்டே வந்து, நூற்றைம்பதாம் நாள் முடிவில் வெள்ளம் வடிந்தது.
4 ஏழாம் மாதத்தில் பதினேழாம் நாளன்று அரராத்து மலைத்தொடர்மேல் பேழை தங்கியது.
5 பத்தாம் மாதம் வரை வெள்ளம் குறைந்து கொண்டே வந்தது. பத்தாம் மாதத்தின் முதல் நாளில் மலை உச்சிகள் தெரிந்தன.
6 நாற்பது நாள்கள் முடிந்தபின் பேழையில் தாம் அமைத்திருந்த சாளரத்தை நோவா திறந்து,
7 காகம் ஒன்றை வெளியே அனுப்பினார். அது மண்ணுலகில் வெள்ளம் வற்றும் வரை போவதும் வருவதுமாக இருந்தது.
8 பின்னர், நிலப்பரப்பிலிருந்து வெள்ளம் வடிந்துவிட்டதா என்று பார்க்கப் புறா ஒன்றைத் தம்மிடமிருந்து வெளியே அனுப்பினார்.
9 ஆனால், அதற்கு கால் வைத்து தங்குவதற்கு இடம் தென்படாததால், அது அவரிடமே பேழைக்குத் திரும்பி வந்தது. ஏனெனில், நிலப்பரப்பு முழுவதிலும் இன்னும் வெள்ளம் நின்றது. ஆகவே, அவர் தம் கையை நீட்டி அதைப் பிடித்துத் தம்மிடம் பேழைக்குள் சேர்த்துக் கொண்டார்.
10 அவர் இன்னும் ஏழு நாள்கள் காத்திருந்து மீண்டும் புறாவைப் பேழையிலிருந்து வெளியே அனுப்பினார்.
11 மாலையில் அது அவரிடம் திரும்பி வந்தபொழுது, அதன் அலகில் அது கொத்திக்கொண்டு வந்த ஒலிவ இலை இருந்தது. அப்பொழுது நோவா மண்ணுலகில் வெள்ளம் வற்றிவிட்டது என்று தெரிந்துகொண்டார்.
12 இன்னும் ஏழு நாள்கள் காத்திருந்தபின், புறாவை வெளியே அனுப்பினார். அது அவரிடம் மறுபடி திரும்பி வரவில்லை.
13 அவருக்கு அறுநூற்றொன்று வயதான ஆண்டின் முதல் மாதத்தின் முதல் நாளில் மண்ணுலகப் பரப்பில் இருந்த வெள்ளம் வற்றியது. அப்பொழுது நோவா பேழையின் மேற்கூரையைத் திறந்து பார்த்தார். இதோ! நிலமெல்லாம் உலர்ந்திருந்தது.
14 இரண்டாம் மாதத்தின் இருபத்தேழாம் நாளில் மண்ணுலகில் நீர் வற்றியிருந்தது.
15 அப்பொழுது கடவுள் நோவாவிடம் கூறியது:
16 “நீயும் உன்னுடன் உன் மனைவியும் உன் புதல்வரும் உன் புதல்வரின் மனைவியரும் பேழையிலிருந்து வெளியே வாருங்கள்.
17 உன்னுடன் உயிரோடு இருக்கும் பறவைகள், விலங்குகள், நிலத்தில் ஊர்வன ஆகிய உயிரினங்கள் எல்லாவற்றையும் உன்னுடன் வெளியே கொண்டு வா. மண்ணுலகில் அவை பன்மடங்காகட்டும். பூவுலகில் அவை பலுகிப் பெருகிப் பலன் தரட்டும்.”
18 ஆகவே, நோவாவும் அவர் புதல்வரும் அவர் மனைவியும் அவர் புதல்வரின் மனைவியரும் அவருடன் வெளியே வந்தனர்.
19 விலங்குகள், ஊர்வன, பறவைகள், மண்ணுலகில் நடமாடும் அனைத்தும் வகை வகையாகப் பேழைகளிலிருந்து வெளியே வந்தன.
நோவா பலி செலுத்தல்
20 அப்பொழுது நோவா ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் கட்டி அதன்மேல் எல்லா வகைத் தக்க விலங்குகள், தக்க பறவைகளிலிருந்து எடுக்கப்பட்டவற்றை எரி பலியாகச் செலுத்தினார்.
21 ஆண்டவர் நறுமணத்தை நுகர்ந்து, தமக்குள் சொல்லிக் கொண்டது; “மனிதரை முன்னிட்டு நிலத்தை இனி நான் சபிக்கவே மாட்டேன். ஏனெனில், மனிதரின் இதயச் சிந்தனை இளமையிலிருந்தே தீமையை உருவாக்குகின்றது. இப்பொழுது நான் செய்ததுபோல இனி எந்த உயிரையும் அழிக்கவே மாட்டேன்.
22 மண்ணுலகு இருக்கும் நாளளவும் விதைக்கும் காலமும் அறுவடைக் காலமும் குளிரும் வெப்பமும், கோடைக்காலமும் குளிர்க்காலமும் பகலும் இரவும் என்றும் ஓய்வதில்லை.” | https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-8 |
8 | தொடக்கநூல் | தொடக்கநூல் அதிகாரம் – 9 – திருவிவிலியம் | நோவாவுடன் கடவுளின் உடன்படிக்கை
1 கடவுள் நோவாவிற்கும் அவர் புதல்வருக்கும் ஆசி வழங்கிக் கூறியது: “பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்.
2 மண்ணுலகின் விலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன, கடலின் மீன்கள் அனைத்தும் உங்களுக்கு அஞ்சி நடுங்கட்டும்! அவை உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
3 நடமாடி உயிர்வாழும் அனைத்தும் உங்களுக்கு உணவாகட்டும். உங்களுக்குப் பசுமையான செடிகளை உணவாகத் தந்தது போல இவை எல்லாவற்றையும் தருகிறேன்.
4 இறைச்சியை அதன் உயிராகிய இரத்தத்தோடு உண்ணாதீர்கள்.
5 உங்கள் உயிராகிய இரத்தத்திற்கு நான் ஈடு கேட்பேன். உயிரினம் ஒவ்வொன்றிடமும் மனிதர் ஒவ்வொருவரிடமும் நான் ஈடு கேட்பேன். மனிதரின் உயிருக்காக அவரவர் சகோதரரிடம் உயிரை நான் ஈடாகக் கேட்பேன்.
6 ஒரு மனிதரின் இரத்தத்தை எவர் சிந்துகிறாரோ அவரது இரத்தம் வேறொரு மனிதரால் சிந்தப்படும். ஏனெனில், கடவுள் மனிதரைத் தம் உருவில் உண்டாக்கினார்.
7 நீங்கள் பலுகிப் பெருகிப் பன்மடங்காகி மண்ணுலகை நிரப்புங்கள்.”
8 கடவுள் நோவாவிடமும் அவருடனிருந்த அவர் புதல்வரிடமும் கூறியது:
9 “இதோ! நான் உங்களோடும் உங்களுக்குப் பின்வரும் உங்கள் வழிமரபினரோடும்
10 பேழையிலிருந்து வெளிவந்து உங்களோடிருக்கும் உயிரினங்கள், பறவைகள்,கால்நடைகள், நிலத்தில் உங்களுடன் உயிர்வாழும் விலங்கினங்கள் எல்லாவற்றோடும், மண்ணுலகில் உள்ள எல்லா உயிர்களோடும் என் உடன்படிக்கையை நிலைநாட்டுகிறேன்.
11 உங்களோடு என் உடன்படிக்கையை நிறுவுகிறேன்; சதையுள்ள எந்த உயிரும் வெள்ளப் பெருக்கால் மீண்டும் அழிக்கப்படாது. மண்ணுலகை அழிக்க இனி வெள்ளப் பெருக்கு வரவே வராது.”
12 அப்பொழுது கடவுள், “எனக்கும் உங்களுக்கும் உங்களுடன் இருக்கும் உயிருள்ள எல்லாவற்றிற்குமிடையே தலைமுறைதோறும் என்றென்றும் இருக்கும்படி, நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளமாக,
13 என் வில்லை மேகத்தின்மேல் வைக்கிறேன். எனக்கும் மண்ணுலகுக்கும் இடையே உடன்படிக்கையின் அடையாளமாக இது இருக்கட்டும்.
14 மண்ணுலகின் மேல் நான் மேகத்தை வருவிக்க, அதன்மேல் வில் தோன்றும்பொழுது,
15 எனக்கும் உங்களுக்கும் சதையுள்ள உயிரினங்கள் எல்லாவற்றுக்கும் இடையே உள்ள என் உடன்படிக்கையை நான் நினைவுகூர்வேன். உயிர்கள் எல்லாவற்றையும் அழிப்பதற்குத் தண்ணீர் இனி ஒருபோதும் பெருவெள்ளமாக மாறாது.
16 வில் மேகத்தின்மேல் தோன்றும்பொழுது அதை நான் கண்டு, கடவுளாகிய எனக்கும் மண்ணுலகில் இருக்கும் சதையுள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் இடையே என்றென்றுமுள்ள உடன்படிக்கையை நினைவுகூர்வேன்” என்றார்.
17 கடவுள் நோவாவிடம், “எனக்கும் மண்ணுலகில் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் இடையே நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளம் இதுவே” என்றார்.
நோவாவும் அவர் புதல்வரும்
18 சேம், காம், எப்பேத்து, ஆகியோர் பேழையிலிருந்து வெளிவந்த நோவாவின் புதல்வர். காம் கானானின் தந்தை.
19 இவர்கள் மூவரும் நோவாவின் புதல்வர். இவர்களிலிருந்துதான் மண்ணுலகு முழுவதும் மனித இனம் பரவியது.
20 நோவா நிலத்தில் பயிரிடுபவராகித் திராட்சைத் தோட்டம் அமைத்தார்.
21 அவர் திராட்சை இரசத்தைக் குடித்துப் போதைக்குள்ளாகித் தம் கூடாரத்தில் ஆடை விலகிக் கிடந்தார்.
22 கானானின் தந்தையாகிய காம் தன் தந்தை திறந்த மேனியாராய்க் கிடப்பதைக் கண்டு, வெளியே இருந்த தன் இரு சகோதரரிடம் அதைத் தெரிவித்தான்.
23 அப்பொழுது சேமும், எப்பேத்தும் ஒரு துணியை எடுத்துத் தங்கள் இருவரின் தோள்மேல் போட்டுக்கொண்டு பின்னோக்கி நடந்து தங்கள் தந்தையின் திறந்த மேனியை மூடினர். அவர்கள் முகம் எதிர்ப்பக்கம் நோக்கி இருந்ததால் தங்கள் தந்தையின் திறந்த மேனியை அவர்கள் பார்க்கவில்லை.
24 நோவாவிற்குப் போதை தெளிந்ததும், தம் இளைய மகன் தமக்குச் செய்ததை அறிந்தார்.
25 அப்பொழுது அவர்,
“கானான் சபிக்கப்பட்டவன்;
தன் சகோதரருக்கு அவன்
அடிமையிலும் அடிமையாக இருப்பான்.
26 சேமின் கடவுளாகிய ஆண்டவர் போற்றி!
அவனுக்குக் கானான்
அடிமையாக இருப்பான்.
27 கடவுள் எப்பேத்து
குடும்பத்தைப் பெருகச் செய்யட்டும்.
அவன் சேமின் கூடாரத்தில் வாழட்டும்.
அவனுக்கும் கானான்
அடிமையாக இருக்கட்டும்” என்றார்.
28 வெள்ளப்பெருக்குக்குப் பின்னர், நோவா முந்நூற்றைம்பது ஆண்டுகள் வாழ்ந்தார்.
29 இவ்வாறு, நோவா தொள்ளாயிரத்து ஐம்பது ஆண்டுகள் வாழ்ந்தபின் இறந்தார்.
9:1 தொநூ 1:28.
9:4 லேவி 7:26-27; லேவி 17:10-14; 19:26; இச 12:16,23; 15:23.
9:6 தொநூ 1:26; விப 20:13.
9:7 தொநூ 1:28. | https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-9 |
9 | தொடக்கநூல் | தொடக்கநூல் அதிகாரம் – 10 – திருவிவிலியம் | நோவா புதல்வரின் வழிமரபினர்
(1 குறி 1:5-23)
1 நோவாவின் புதல்வர் சேம், காம், எப்பேத்து ஆகியோரின் வழிமரபினர் இவர்களே. வெள்ளப் பெருக்குக்குப்பின் அவர்களுக்குப் புதல்வர் பிறந்தனர்.
2 எப்பேத்தின் புதல்வர்: கோமேர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மெசேக்கு, தீராசு.
3 கோமேரின் புதல்வர்: அஸ்கனாசு, இரிபாத்து, தோகர்மா.
4 யாவானின் புதல்வர்: எலிசா, தர்சீசு, கித்திம், தோதானிம்.
5 இவர்கள் வழிவந்த கடற்கரை நாட்டினர் மொழி, குடும்ப, இனவாரியாகப் பிரிந்து தம் நாடுகளில் பரவினர்.
6 காமின் புதல்வர்; கூசு, எகிப்து, பூற்று, கானான்.
7 கூசின் புதல்வர்; செபா, அவிலா, சப்தா, இராமா, சப்தக்கா. இராமாவின் புதல்வர்; சேபா, தெதான்.
8 மேலும் கூசுக்கு நிம்ரோது பிறந்தான். இவன்தான் முதன்முதலாக உலகத்தில் பேராற்றல் கொண்டவனாக விளங்கியவன்.
9 ஆண்டவர் திருமுன் இவன் ஆற்றல்மிக்க வேடனாக இருந்தான். இதனால் “ஆண்டவர் திருமுன் நிம்ரோதைப் போன்ற ஆற்றல்மிக்க வேடன்” என்ற வழக்கு ஏற்படலாயிற்று.
10 முதன்முதலில் சினயார் நாட்டிலிருந்த பாபேல், எரேக்கு, அக்காது, கல்னே ஆகியவை அவன் ஆட்சிக்குள் வந்தன.
11 அந்நாட்டிலிருந்து அசீரியா நாட்டுக்குச் சென்று, அங்கே நினிவே, இரகபோத்து, ஈர், காலாகு ஆகிய நகரங்களை அமைத்தான்.
12 நினிவேக்கும் காலாகிற்கும் இடையே மிகப்பெரிய நகரமாகிய இரசேனை அவன் நிறுவினான்.
13 எகிப்தின் புதல்வர்; லூதிம், அனாமிம், இலகாபிம், நப்துகிம்,
14 பத்ருசிம், பெலிஸ்தியரின் மூதாதையரான கஸ்லுகிம், கப்தோரிம்.
15 கானானின் தலைமகன் சீதோன், ஏனைய புதல்வர்; ஏத்து,
16 எபுசி, எமோரி, கிர்காசி,
17 இவ்வி, அற்கி, சீனி,
18 அர்வாது, செமாரி, அமாத்தி. இந்தக் கானானின் குடும்பங்கள் பின்னர் பிரிந்து பரவலாயின.
19 கானானியர் நாட்டு எல்லை சீதோனிலிருந்து தெற்கே கெரார் செல்லும் திசையில் காஸாவரையும் கிழக்கில் சோதோம், கொமோரா, அத்மா, செபோயிம் செல்லும் திசையில் இலாசா வரையும் பரவியிருந்தது.
20 இவை காம் புதல்வரின் குடும்ப, மொழி, நாடு, இனவாரியான பிரிவுகள்.
21 எப்பேத்தின் மூத்த சகோதரன் சேமுக்குப் புதல்வர் பிறந்தனர். சேம் ஏபேரியரின் முதுபெருந்தந்தை.
22 சேமின் ஏனைய புதல்வர்: ஏலாம், அசீரியா, அர்பகசாது, லூது, ஆராம்.
23 ஆராமின் புதல்வர்: ஊசு, ஊல், கெத்தெர், மாசு.
24 அர்பகசாதுக்குச் செலாகு பிறந்தான். செலாகிற்கு ஏபேர் பிறந்தான்.
25 ஏபேருக்கு புதல்வர் இருவர் பிறந்தனர்; ஒருவனின் பெயர் பெலேக்கு. ஏனெனில், அவன் காலத்தில்தான் உலக மக்கள் பிரிந்தனர். அவன் சகோதரனின் பெயர் யோக்தான்.
26 யோக்தானின் புதல்வர்; அல்மோதாது, செலேபு, அட்சர்மாவேத்து, எராகு,
27 அதோராம், ஊசால், திக்லா,
28 ஓபால், அபிமாவேல், சேபா,
29 ஓபீர், அவிலா, யோபாபு.
30 அவர்கள் வாழ்ந்த நாடு மேசாவிலிருந்து கிழக்கே செப்பார் செல்லும் திசையில் இருந்த மலைநாடுவரை பரவியிருந்தது.
31 இவை சேம் புதல்வரின் குடும்ப, மொழி, நாட்டு, இனவாரியான பிரிவுகள்.
32 இவை நோவா புதல்வரின் வழிவந்த குடும்பங்களின் இனவாரியான தலைமுறைகள்.இவர்கள் வழிவந்த மக்களினங்களே வெள்ளப் பெருக்கிற்குப் பின் உலகின் எல்லா நாடுகளிலும் பரவின. | https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-10 |
10 | தொடக்கநூல் | தொடக்கநூல் அதிகாரம் – 11 – திருவிவிலியம் | பாபேல் கோபுரம்
1 அப்பொழுது உலகம் முழுவதிலும் ஒரே மொழியும் ஒரே விதமான சொற்களும் இருந்தன.
2 மக்கள் கிழக்கிலிருந்து புறப்பட்டு வந்து சினயார் நாட்டில் சமவெளி ஒன்றைக் கண்டு, அங்கே குடியேறினர்.
3 அப்பொழுது அவர்கள், ஒருவரை ஒருவர் நோக்கி, “வாருங்கள், நாம் செங்கற்கள் அறுத்து அவற்றை நன்றாகச் சுடுவோம்” என்றனர். அவர்கள் செங்கல்லைக் கல்லாகவும் கீலைக் காரையாகவும் பயன்படுத்தினர்.
4 பின், அவர்கள் “வாருங்கள், உலகம் முழுவதும் நாம் சிதறுண்டு போகாதபடி வானளாவிய கோபுரம் கொண்ட நகர் ஒன்றை நமக்காகக் கட்டி எழுப்பி, நமது பெயரை நிலை நாட்டுவோம்” என்றனர்.
5 மானிடர் கட்டிக்கொண்டிருந்த நகரையும் கோபுரத்தையும் காண்பதற்கு ஆண்டவர் கீழே இறங்கி வந்தார்.
6 அப்பொழுது ஆண்டவர், “இதோ! மக்கள் ஒன்றாக இருக்கின்றனர். அவர்கள் எல்லோரும் ஒரே மொழி பேசுகின்றனர். அவர்கள் செய்யவிருப்பதன் தொடக்கமே இது! அவர்கள் திட்டமிட்டுச் செய்யவிருப்பது எதையும் இனித்தடுத்து நிறுத்த முடியாது.
7 வாருங்கள், நாம் கீழே போய் அங்கே ஒருவர் மற்றவரின் பேச்சைப் புரிந்து கொள்ள முடியாதபடி, அவர்கள் மொழியில் குழப்பத்தை உண்டாக்குவோம்” என்றார்.
8 ஆண்டவர் அவர்களை அங்கிருந்து உலகம் முழுவதிலும் சிதறுண்டுபோகச் செய்ததால் அவர்கள் நகரைத் தொடர்ந்து கட்டுவதைக் கைவிட்டனர்.
9 ஆகவே, அது “பாபேல்” என்று வழங்கப்பட்டது. ஏனெனில், அங்கே ஆண்டவர் உலகெங்கும் வழங்கி வந்த மொழியில் குழப்பத்தை உண்டாக்கினார். அங்கிருந்து அவர்களை ஆண்டவர் உலகம் முழுவதிலும் சிதறுண்டு போகச் செய்தார்.
சேமின் வழிமரபினர்
(1 குறி 1:24-27)
10 சேமின் தலைமுறைகள் இவையே; வெள்ளப் பெருக்கிற்கு இரண்டு ஆண்டுகளுக்குப்பின் சேம் நூறு வயதாக இருந்தபொழுது அவனுக்கு அர்பகசாது பிறந்தான்.
11 அர்பகசாது பிறந்தபின் சேம் ஐந்நூறு ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது சேமுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
12 அர்பகசாது முப்பத்தைந்து வயதாக இருந்தபொழுது அவனுக்குச் செலாகு பிறந்தான்.
13 செலாகு பிறந்த பின் அர்பகசாது நானூற்று மூன்று ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது அர்பகசாதுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
14 செலாகு முப்பது வயதாக இருந்தபொழுது அவனுக்கு ஏபேர் பிறந்தான்.
15 ஏபேர் பிறந்தபின் செலாகு நானூற்று மூன்று ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது செலாகிற்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
16 ஏபேர் முப்பத்து நான்கு வயதாக இருந்தபொழுது அவனுக்குப் பெலேகு பிறந்தான்.
17 பெலேகு பிறந்தபின் ஏபேர் நானூற்று முப்பது ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது ஏபேருக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
18 பெலேகு முப்பது வயதாக இருந்தபொழுது அவனுக்கு இரயு பிறந்தான்.
19 இரயு பிறந்தபின் பெலேகு இருநூற்று ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது பெலேகிற்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
20 இரயு முப்பத்திரண்டு வயதாக இருந்தபொழுது அவனுக்குச் செரூகு பிறந்தான்.
21 செரூகு பிறந்தபின் இரயு இருநூற்று ஏழு ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது இரயுவுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
22 செரூகு முப்பது வயதாக இருந்தபொழுது அவனுக்கு நாகோர் பிறந்தான்.
23 நாகோர் பிறந்தபின் செரூகு இருநூறு ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது செரூகுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
24 நாகோர் இருபத்தொன்பது வயதாக இருந்தபொழுது அவனுக்குத் தெராகு பிறந்தான்.
25 தெராகு பிறந்தபின் நாகோர் நூற்றுப்பத்தொன்பது ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது நாகோருக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.
26 தெராகு எழுபது வயதாக இருந்தபொழுது அவனுக்கு ஆபிராம், நாகோர், ஆரான் ஆகியோர் பிறந்தனர்.
தெராகின் வழிமரபினர்
27 தெராகின் தலைமுறைகள் இவையே; தெராகிற்கு ஆபிராம், நாகோர், ஆரான் ஆகியோர் பிறந்தனர். ஆரானுக்கு லோத்து பிறந்தான்.
28 ஆரான் தான் பிறந்த நாட்டில் ஊர் என்ற கல்தேயர் நகரில் தன் தந்தை தெராகிற்கு முன்பே இறந்தான்.
29 ஆபிராமும், நாகோரும் பெண் கொண்டனர். ஆபிராமின் மனைவி பெயர் சாராய். நாகோரின் மனைவி பெயர் மில்கா. மில்கா ஆரானின் மகள். மில்கா, இசுக்கா ஆகியோரின் தந்தை ஆரான்.
30 சாராய் குழந்தைப்பேறு இல்லாமல் மலடியாய் இருந்தார்.
31 தெராகு தம் மகன் ஆபிராமையும், தம் மகன் ஆரானின் புதல்வன் லோத்தையும், தம் மருமகளும் தம் மகன் ஆபிராமின் மனைவியுமான சாராயையும் அழைத்துக் கொண்டு ஊர் என்ற கல்தேயர் நகரை விட்டுக் கானான் நாட்டை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். காரான் என்ற இடத்திற்கு வந்ததும் அங்கேயே அவர்கள் தங்கி வாழலாயினர்.
32 தெராகு இருநூற்று ஐந்து வயதாக இருந்தபொழுது காரானில் இறந்தார். | https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-11 |
11 | தொடக்கநூல் | தொடக்கநூல் அதிகாரம் – 12 – திருவிவிலியம் | ஆபிராமின் அழைப்பு
1 ஆண்டவர் ஆபிராமை நோக்கி, “உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்.
2 உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய்.
3 உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்; உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்” என்றார்.
4 ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் லோத்தும் சென்றார். ஆபிராம் ஆரானைவிட்டுச் சென்றபொழுது அவருக்கு வயது எழுபத்தைந்து.
5 ஆபிராம் தம் மனைவி சாராயையும் தம் சகோதரனின் மகன் லோத்தையும் உடனழைத்துச் சென்றார். அவர்கள் ஆரானில் சேர்த்திருந்த செல்வத்துடனும், வைத்திருந்த ஆள்களுடனும் கானான் நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்று அந்நாட்டைச் சென்றடைந்தனர்.
6 ஆபிரகாம் அந்நாட்டில் நுழைந்து செக்கேமில் இருந்த மோரேயின் கருவாலி மரத்தை அடைந்தார். அப்பொழுது கானானியர் அந்நாட்டில் வாழ்ந்து வந்தனர்.
7 ஆண்டவர் ஆபிராமுக்குத் தோன்றி, “உன் வழிமரபினர்க்கு இந்நாட்டைக் கொடுப்பேன்” என்றார். ஆகவே, தமக்குத் தோன்றிய ஆண்டவருக்கு அங்கே அவர் ஒரு பலிபீடத்தை எழுப்பினார்.
8 ஆபிராம் அங்கிருந்து புறப்பட்டு, பெத்தேலுக்குக் கிழக்கே இருந்த மலைப்பக்கம் சென்று பெத்தேலுக்கு மேற்கே ஆயிக்குக் கிழக்கே கூடாரம் அமைத்துக் குடியிருந்தார். அங்கே ஆண்டவருக்கு அவர் ஒரு பலிபீடத்தை எழுப்பி ஆண்டவரது திருப்பெயரைத் தொழுதார்.
9 இவ்வாறு, ஆபிராம் படிப்படியாக நெகேபு நோக்கிப் பயணம் செய்தார்.
எகிப்தில் ஆபிராம்
10 அப்பொழுது அந்நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சம் கடுமையாக இருந்ததால், ஆபிராம் தாம் தங்கி வாழ்வதற்கு எகிப்து நாட்டிற்குச் சென்றார்.
11 அவர் எகிப்தை நெருங்கிய பொழுது தம் மனைவி சாராயிடம், “நீ கண்ணுக்கு அழகானவள் என்பது எனக்குத் தெரியும்.
12 எகிப்தியர் உன்னைக் காணும்பொழுது “இவள் அவனுடைய மனைவி” எனச்சொல்லி என்னைக் கொன்று விடுவர்; உன்னையோ உயிரோடு விட்டுவிடுவர்.
13 உன் பொருட்டு எனக்கு நல்லது நடக்கவும் உன்னால் என் உயிர் காப்பாற்றப்படவும் நீ என் சகோதரி எனச் சொல்லி விடு” என்றார்.
14 ஆபிராம் எகிப்தைச் சென்றடைந்தபொழுது, சாராய் மிகவும் அழகானவராக இருப்பதை எகிப்தியர் கண்டனர்.
15 பார்வோனின் மேலதிகாரிகள் அவரைக் கண்டு அவரைப்பற்றிப் புகழ்ந்தனர். ஆகவே, அவர் பார்வோனின் அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
16 அவர் பொருட்டு ஆபிராமுக்குப் பார்வோன் நன்மை செய்தான்; ஆடு மாடுகளையும் கழுதைகளையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், பெண் கழுதைகளையும் ஒட்டகங்களையும் அவருக்குக் கொடுத்தான்.
17 ஆனால், ஆண்டவர் ஆபிராமின் மனைவி சாராய்க்கு நேரிட்டதை முன்னிட்டுப் பார்வோனையும் அவன் குடும்பத்தாரையும் கொடிய கொள்ளை நோய்களால் துன்பப்படுத்தினார்.
18 பார்வோன் ஆபிராமை அழைத்து அவரிடம், “நீ எனக்கு இப்படிச் செய்து விட்டாயே! அவள் உன் மனைவி என்று ஏன் என்னிடம் சொல்லவில்லை?
19 அவள் உன் சகோதரி என்று நீ ஏன் சொன்னாய்? அதனால்தான் நான் அவளை என் மனைவியாக எடுத்துக் கொண்டேன்! இப்பொழுதே, உன் மனைவியைக் கூட்டிக்கொண்டு புறப்படு” என்றான்.
20 பின் பார்வோன் தன் ஆள்களுக்குக் கட்டளையிட அவர்கள் அவரை அவர் மனைவியுடனும் அவருக்குரிய எல்லாவற்றுடனும் அனுப்பிவிட்டனர்.
12:1 திபா 7:2-3; எபி 11:8.
12:3 கலா 3:8.
12:7 திபா 7:5; கலா 3:16.
12:13 தொநூ 20:2; 26:7. | https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-12 |
12 | தொடக்கநூல் | தொடக்கநூல் அதிகாரம் – 13 – திருவிவிலியம் | ஆபிராம், லோத்து பிரிதல்
1 ஆகவே, ஆபிராம் தம் மனைவியுடனும் தமக்குரிய எல்லாவற்றுடனும் எகிப்திலிருந்து நெகேபை நோக்கிச் சென்றார். அவருடன் லோத்தும் சென்றார்.
2 அப்பொழுது ஆபிராம் கால்நடைகளும் வெள்ளியும் தங்கமும் கொண்ட பெரிய செல்வராக இருந்தார்.
3 நெகேபிலிருந்து பெத்தேல் வரை படிப்படியாகப் பயணம் செய்து பெத்தெலுக்கும் ஆயிக்கும் இடையே முதலில் தம் கூடாரம் இருந்த அதே இடத்தை அடைந்தார்.
4 தாம் முதலில் பலிபீடம் அமைத்திருந்த இடத்தை அடைந்து அங்கே அவர் ஆண்டவரது திருப்பெயரைத் தொழுதார்.
5 ஆபிராமுடன் சென்ற லோத்துக்கும் ஆட்டு மந்தைகளும் மாட்டு மந்தைகளும் கூடாரங்களும் இருந்தன.
6 அவர்கள் சேர்ந்து வாழ்வதற்கு இடம் போதவில்லை. அவர்களுக்கு மிகுதியான உடைமைகள் இருந்ததால், அவர்களால் சேர்ந்து வாழ முடியவில்லை.
7 ஆபிராமின் கால்நடைகளை மேய்ப்போருக்கும் லோத்தின் கால்நடைகளை மேய்ப்போருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்பொழுது கானானியரும் பெரிசியரும் அந்நாட்டில் வாழ்ந்து வந்தனர்.
8 ஆபிராம் லோத்தை நோக்கி, “எனக்கும் உனக்கும் என் ஆள்களுக்கும் உன் ஆள்களுக்கும் இடையே பூசல் ஏற்படவேண்டாம். ஏனெனில், நாம் உறவினர்.
9 நாடு முழுவதும் உன் கண்முன் இருக்கின்றது அல்லவா? என்னிடமிருந்து பிரிந்து செல்லும்படி கேட்டுக்கொள்ளுகிறேன். நீ இடப்பக்கம் சென்றால் நான் வலப்பக்கம் செல்வேன்; நீ வலப்பக்கம் சென்றால் நான் இடப்பக்கம் செல்வேன்” என்றார்.
10 லோத்து கண்களை உயர்த்தி எங்கும் நீர்வளம் சிறந்திருந்த யோர்தானின் சுற்றுப்பகுதியைக் கண்டார். சோகார் வரை அப்பகுதி ஆண்டவரது தோட்டம் போலும் எகிப்து நாட்டைப் போலும் இருந்தது. சோதோம், கொமோராவை ஆண்டவர் அழிப்பதற்கு முன் அது அவ்வாறிருந்தது.
11 லோத்து யோர்தான் சுற்றுப்பகுதி முழுவதையும் தேர்ந்துகொண்டு கிழக்குப் பக்கமாகப் பயணமானார். இவ்வாறு ஒருவர் ஒருவரிடம் பிரிந்தனர்.
12 ஆபிராம் கானான் நாட்டில் வாழ்ந்து வந்தார். லோத்து யோர்தான் சுற்றுப் பகுதியிலிருந்த நகரங்களில் வாழ்ந்துவந்தார். இறுதியில் சோதோமுக்கு அருகில் கூடாரம் அமைத்துக்கொண்டார்.
13 ஆனால், சோதோமின் மக்கள் ஆண்டவருக்கு எதிரான மிகக்கொடிய பாவிகளாக இருந்தனர்.
ஆபிராம் எபிரோனில் குடியேறல்
14 லோத்து ஆபிராமிடமிருந்து பிரிந்தபின், ஆண்டவர் ஆபிராமை நோக்கி, “நீ இருக்கும் இடத்திலிருந்து உன் கண்களை உயர்த்தி வடக்கே, தெற்கே, கிழக்கே, மேற்கே பார்.
15 ஏனெனில், நீ காணும் இந்த நாடு முழுவதையும் உனக்கும் உன் வழிமரபினருக்கும் என்றென்றும் கொடுக்கப்போகிறேன்.
16 உன் வழிமரபினரைப் பூவுலகின் மண்ணைப் போலப் பெருகச் செய்வேன். ஆகவே, பூவுலகின் மணலை ஒருவன் எண்ண முடியுமானால், உன் வழிமரபினரையும் எண்ணலாம்.
17 நீ எழுந்து, இந்நாட்டின் நெடுகிலும், குறுக்கிலும் நடந்து பார். ஏனெனில், இதை நான் உனக்குக் கொடுக்கப் போகிறேன்” என்றார்.
18 ஆகவே, ஆபிராம் தம் கூடாரத்தைப் பிரித்துக் கொண்டு எபிரோனிலிருந்த மம்ரே என்ற கருவாலி மரத்தோப்பருகில் வந்து வாழ்ந்தார். அங்கே ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் எழுப்பினார்.
13:10 தொநூ 2:10.
13:15 திப 7:5. | https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-13 |
13 | தொடக்கநூல் | தொடக்கநூல் அதிகாரம் – 14 – திருவிவிலியம் | ஆபிராம் லோத்தை மீட்டல்
1 அம்ராபல் சினயார் அரசனாகவும் அரியோக்கு எல்லாசரின் அரசனாகவும் கெதர்லகோமர் ஏலாமின் அரசனாகவும் திதால் கோயிமின் அரசனாகவும் இருந்தபொழுது,
2 அவர்கள் சோதோம் அரசன் பெரா, கொமோரா அரசன் பிர்சா, அதிமா அரசன் சினாபு, செபோயிம் அரசன் செமேபர், பேலா அரசன் சோவார் ஆகியோருக்கு எதிராகப் போர் தொடுத்தனர்.
3 அவர்கள் அனைவரும் இப்பொழுது உப்புக்கடலாக இருக்கும் சித்திம் பள்ளத்தாக்கில் ஒன்று திரண்டனர்.
4 பன்னிரண்டு ஆண்டுகள் அவர்கள் கெதர்லகோமருக்குப் பணிந்திருந்தனர். ஆனால், பதின்மூன்றாம் ஆண்டில் அவனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர்.
5 ஆனால், பதினான்காம் ஆண்டில் கெதர்லகோமரும் அவனுடன் இருந்த அரசர்களும் வந்து அஸ்தரோத்து கர்னயிமிலிருந்த இரபாயியரையும், காமிலிருந்த சூசியரையும், சாவே கிரியாத்தயிமிலிருந்த ஏமியரையும்
6 சேயிர் மலைப்பகுதியில் இருந்த ஓரியரையும் பாலை நிலத்தின் எல்லையில் இருந்த ஏல்பாரான்வரை துரத்திச் சென்று முறியடித்தனர்.
7 அவர்கள் திரும்பும் வழியில் காதேசு என்ற ஏன் மிட்சுபாற்றுக்கு வந்து அமலேக்கியரின் நாடு முழுவதையும் அச்சோன் தாமாரில் வாழ்ந்த எமோரியரையும் அழித்தனர்.
8 அப்பொழுது சோதோம் அரசனும் கொமோரா அரசனும் அதிமா அரசனும் செபோயிம் அரசனும் பேலா அரசன் சோவாரும் சென்று,
9 ஏலாம் அரசன் கெதர்லகோமருடனும் கோயிம் அரசன் திதாலுடனும் சினயார் அரசன் அம்ராபலுடனும் எல்லாசர் அரசன் அரியோக்குடனும்-ஆக, நான்கு அரசர்கள் ஐந்து அரசர்களுக்கு எதிராக சித்திம் பள்ளத்தாக்கில் போர்தொடுத்தனர்.
10 இந்தச் சித்திம் பள்ளத்தாக்கில் கீல் குழிகள் மிகப்பல இருந்தன. சோதோம் அரசனும் கொமோரா அரசனும் தப்பி ஓடியபொழுது அவற்றினுள் விழுந்தனர். மற்றவர்கள் தப்பிப் பிழைப்பதற்கு மலையை நோக்கி ஓடினர்.
11 வெற்றி பெற்றவர்கள் சோதோம், கொமோராவில் இருந்த செல்வங்கள், உணவுப் பண்டங்கள் அனைத்தையும் கவர்ந்து கொண்டு அங்கிருந்து வெளியேறினர்.
12 அவர்கள் சோதோமில் வாழ்ந்த ஆபிராமின் சகோதரன் மகனான லோத்தையும் அவர் செல்வங்களையும் கவர்ந்து கொண்டு சென்றனர்.
13 தப்பிவந்த ஒருவன் எபிரேயரான ஆபிராமிடம் இச்செய்தியை அறிவித்தான். அப்பொழுது ஆபிராம் எசுக்கோல், ஆனேர் ஆகியோரின் சகோதரனான மம்ரே என்ற எமோரியனின் கருவாலி மரத்தோப்பில் வாழ்ந்து வந்தார். அவர்கள் ஆபிராமுடன் உடன்படிக்கை செய்து கொண்டவர்கள்.
14 தம் உறவினர் கைதியாகக் கொண்டு செல்லப்பட்டார் என்பதைக் கேள்வியுற்றதும், ஆபிராம் தம் வீட்டில் பிறந்து வளர்ந்து பயிற்சி பெற்ற முந்நூற்றுப் பதினெட்டுப் பேரைத் திரட்டிக் கொண்டு தாண்வரை அவர்களைத் துரத்திச் சென்றார்.
15 அவரும் அவர் ஆள்களும் அணிஅணியாகப் பிரிந்து இரவில் அவர்களைத் தாக்கித் தோற்கடித்தனர். தமஸ்குக்கு வடக்கே இருக்கும் ஓபாவரை அவர்களைத் துரத்திச் சென்றனர்.
16 அவர் எல்லாச் செல்வங்களையும் மீட்டுக் கொண்டு வந்தார். தம் உறவினரான லோத்தையும் அவர் செல்வங்களையும் பெண்களையும் ஆள்களையும் மீட்டுக் கொண்டு வந்தார்.
ஆபிராமுக்கு மெல்கிசெதேக்கின் ஆசி
17 ஆபிராம் கெதர்லகோமரையும் அவனுடன் இருந்த அரசர்களையும் முறியடித்துத் திரும்பியபொழுது ‘அரசர் பள்ளத்தாக்கு’ என்ற சாவே பள்ளத்தாக்கில் அவரைச் சந்திக்கச் சோதோம் அரசன் வந்தான்.
18 அப்பொழுது சாலேம் அரசர் மெல்கிசெதேக்கு அப்பமும் திராட்சை இரசமும் கொண்டு வந்தார். அவர் ‘உன்னத கடவுளின்’ அர்ச்சகராக இருந்தார்.
19 அவர் ஆபிராமை வாழ்த்தி,
“விண்ணுலகையும் மண்ணுலகையும்
தோற்றுவித்த உன்னத கடவுள்
ஆபிராமிற்கு ஆசி வழங்குவாராக!
20 உன் எதிரிகளை உன்னிடம்
ஒப்புவித்த உன்னத கடவுள்
போற்றி! போற்றி!” என்றார்.
அப்பொழுது ஆபிராம் எல்லாவற்றிலிருந்தும் அவருக்குப் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார்.
21 சோதோம் அரசன் ஆபிராமிடம், “ஆள்களை என்னிடம் ஒப்படைத்துவிடும். ஆனால், செல்வங்களை நீரே வைத்துக் கொள்ளும்” என்றான்.
22 அதற்கு ஆபிராம் சோதோம் அரசனிடம், “விண்ணுலகையும் மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னத கடவுளாகிய ஆண்டவருக்கு ஆணையிட்டுக் கூறுகிறேன்;
23 ‘நான்தான் ஆபிராமைச் செல்வன் ஆக்கினேன்’ என்று நீர் சொல்லாதபடி, உமக்குரிய அனைத்திலிருந்தும் ஒரு நூல் துண்டையோ, காலணி வாரையோ, நான் எடுத்துக் கொள்ளமாட்டேன்.
24 இளைஞர்கள் உண்டதைத் தவிர எனக்கு எதுவும் வேண்டாம். ஆனால், என்னுடன் வந்த ஆனேர், சுக்கோல், மம்ரே ஆகியோர் அவர்கள் பங்கை எடுத்துக் கொள்ளட்டும்” என்றார்.
14:18-20 எபி 7:1-10. | https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-14 |
14 | தொடக்கநூல் | தொடக்கநூல் அதிகாரம் – 15 – திருவிவிலியம் | ஆபிராமுடன் கடவுளின் உடன்படிக்கை
1 இந்நிகழ்ச்சிகளுக்குப் பின், ஆண்டவரின் வாக்கு ஆபிராமுக்கு ஒரு காட்சி வழியாக வந்து அறிவித்தது: “ஆபிராம்! அஞ்சாதே. நான் உனக்குக் கேடயமாக இருப்பேன். உனக்குப் பெரும் கைம்மாறு கிடைக்கும்.”
2 அப்பொழுது ஆபிராம், “என் தலைவராகிய ஆண்டவரே, எனக்கு என்னதான் தருவீர்? எனக்கோ குழந்தையே இல்லை! தமஸ்கு நகர் எலியேசர்தான் எனக்குப்பின் என் இல்லத்திற்கு உரிமை மகன் ஆகப்போகிறான்!
3 நீர் எனக்குக் குழந்தை ஒன்றும் தராததால் என் வீட்டு அடிமை மகன் எனக்குப் பின் உரிமையாளன் ஆகப் போகிறான்” என்றார்.
4 அதற்கு மறுமொழியாக, “இவன் உனக்குப்பின் உரிமையாளன் ஆகமாட்டான். ஆனால், உனக்குப் பிறப்பவனே உனக்குப்பின் உரிமையாளன் ஆவான்” என்று ஆபிராமுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது.
5 அப்பொழுது ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, “வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்” என்றார்.
6 ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்.
7 ஆண்டவர் ஆபிராமிடம், “இந்நாட்டை உனக்கு உரிமைச் சொத்தாக அளிக்க உன்னைக் கல்தேயரின் ஊர் என்ற நகரிலிருந்து இங்கு அழைத்து வந்த ஆண்டவர் நானே” என்றார்.
8 அதற்கு ஆபிராம், “என் தலைவராகிய ஆண்டவரே, இதை நான் உரிமையாக்கிக் கொள்வேன் என்பதை எப்படித் தெரிந்து கொள்வேன்?” என்றார்.
9 ஆண்டவர் ஆபிராமிடம், “மூன்று வயதுள்ள இளம் பசு, மூன்று வயதுள்ள வெள்ளாடு, மூன்று வயதுள்ள செம்மறியாடு, ஒரு காட்டுப்புறா, ஒரு மாடப்புறா ஆகியவற்றை என்னிடம் கொண்டுவா” என்றார்.
10 ஆபிராம் இவற்றை எல்லாம் அவரிடம் கொண்டுவந்து, அவைகளை இரண்டிரண்டு கூறுகளாக வெட்டி, ஒவ்வொரு பகுதியையும் அததற்கு இணையான பகுதிக்கு எதிரெதிரே வைத்தார். ஆனால், பறவைகளை அவர் வெட்டவில்லை.
11 துண்டித்த உடல்களைப் பறவைகள் தின்ன வந்தபொழுது ஆபிராம் அவற்றை விரட்டிவிட்டார்.
12 கதிரவன் மறையும் நேரத்தில் ஆபிராமுக்கு ஆழ்ந்த உறக்கம் வந்தது. அச்சுறுத்தும் காரிருள் அவரைச் சூழ்ந்தது.
13 ஆண்டவர் ஆபிராமிடம், “நீ உறுதியாகத் தெரிந்து கொள்ள வேண்டியது: உன் வழிமரபினர் வேறொரு நாட்டிற்குப் பிழைக்கச் செல்வர். அங்கே அவர்கள் நானூறு ஆண்டுகள் அடிமைகளாகக் கொடுமைப்படுத்தப்படுவர்.
14 அவர்கள் அடிமை வேலை செய்யும் நாட்டிற்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன். அதற்குப்பின் மிகுந்த செல்வங்களுடன் அந்நாட்டைவிட்டு அவர்கள் வெளியேறுவர்.
15 நீ மிகவும் முதிர்ந்த வயதில் அமைதியாக உன் மூதாதையரிடம் சென்றபின், நல்லடக்கம் செய்யப்படுவாய்.
16 நான்காம் தலைமுறையில் அவர்கள் இங்கே திரும்பி வருவர். ஏனெனில், எமோரியர் இழைக்கும் தீமை இன்னும் முழுமை அடையவில்லை” என்றார்.
17 கதிரவன் மறைந்ததும் இருள்படர்ந்தது. அப்பொழுது புகைந்து கொண்டிருந்த தீச்சட்டி ஒன்றும் எரிந்து கொண்டிருந்த தீப்பந்தம் ஒன்றும் அந்தக் கூறுகளுக்கிடையே சென்றன.
18 அன்றே ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து, “எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறுவரை உள்ள
19 கேனியர், கெனிசியர், கத்மோனியர்,
20 இத்தியர், பெரிசியர், இரபாவியர்
21 எமோரியர், கானானியர், கிர்காசியர், எபூசியர் ஆகியோர் வாழும் இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்” என்றார்.
15:5 உரோ 4:18; எபி 11:12.
15:6 உரோ 4:3; கலா 3:6; யாக் 2:23.
15:12 யோபு 4:13,14.
15:13 திப 7:7.
15:18 திப 7:5. | https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-15 |
15 | தொடக்கநூல் | தொடக்கநூல் அதிகாரம் – 16 – திருவிவிலியம் | ஆகாரும் இஸ்மயேலும்
1 ஆபிராமின் மனைவி சாராய்க்கு மகப்பேறு இல்லை. சாராய்க்கு ஆகார் என்ற எகிப்திய பணிப்பெண் ஒருத்தி இருந்தாள்.
2 சாராய் ஆபிராமிடம், “ஆண்டவர் என்னைப் பிள்ளை பெறாதபடி செய்துவிட்டார். நீர் என் பணிப்பெண்ணிடம் உறவு கொள்ளும். ஒருவேளை அவள் எனக்காகப் பிள்ளை பெற்றுத் தரக்கூடும்” என்றார். ஆபிராம் சாராயின் சொல்லைக் கேட்டார்.
3 ஆபிராம் கானான் நாட்டில் பத்து ஆண்டுகள் வாழ்ந்தபின், அவர் மனைவி சாராய் எகிப்தியப் பணிப்பெண் ஆகாரைத் தம் கணவருக்கு மனைவியாகக் கொடுத்தார்.
4 அவர் ஆகாருடன் உறவு கொண்டபின் அவள் கருவுற்றாள். தான் கருவுற்றிருப்பதைக் கண்டதும் தன் தலைவியை அவள் ஏளனத்துடன் நோக்கினாள்.
5 அப்பொழுது சாராய் ஆபிராமிடம், “எனக்கு இழைக்கப்பட்ட தீங்கு உம்மேல் இருக்கட்டும். நீர் தழுவும்படி நானே கொடுத்த என் பணிப்பெண், அவள் கருவுற்றிருக்கிறாள் என்பதைக் கண்டதிலிருந்து என்னை ஏளனமாக நோக்குகிறாள். ஆண்டவரே எனக்கும் உமக்கும் நீதி வழங்கட்டும்” என்றார்.
6 ஆபிராம் சாராயிடம், “உன் பணிப்பெண் உன் அதிகாரத்தின்கீழ் இருக்கின்றாள். உனக்கு நல்லதாகப் படுவதை அவளுக்குச் செய்” என்றார். இதற்குப்பின் சாராய் அவளைக் கொடுமைப்படுத்தினார். ஆகவே, ஆகார் சாராயிடமிருந்து தப்பி ஓடினாள்.
7 ஆண்டவரின் தூதர் அவளைப் பாலைநிலத்தில் இருந்த ஒரு நீரூற்றுக்கு அருகில் கண்டார். அந்த ஊற்று சூருக்குச் செல்லும் வழியில் இருந்தது.
8 அவர் அவளை நோக்கி, “சாராயின் பணிப்பெண் ஆகார், நீ எங்கிருந்து வருகின்றாய்? எங்கே போகின்றாய்?” என்று கேட்டார். அதற்கு அவள், “என் தலைவி சாராயிடமிருந்து நான் தப்பி ஓடுகிறேன்” என்றாள்.
9 ஆண்டவரின் தூதர் அவளிடம், “நீ உன் தலைவியிடம் திரும்பிச் சென்று அவளுக்குப் பணிந்து நட” என்றார்.
10 பின்பு, ஆண்டவரின் தூதர் அவளிடம், “உன் வழி மரபினரை யாரும் எண்ண முடியாத அளவுக்குப் பெருகச் செய்வேன்” என்றார்.
11 மீண்டும் ஆண்டவரின் தூதர் அவளிடம், “இதோ! கருவுற்றிருக்கும் நீ ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். அவனுக்கு ‘இஸ்மயேல்’ எனப் பெயரிடுவாய். ஏனெனில், உன் துயரத்தில் ஆண்டவர் உனக்குச் செவிசாய்த்தார்.
12 ஆனால், அவன் காட்டுக் கழுதை போல் வாழ்பவனாக இருப்பான். எல்லோரையும் அவன் எதிர்ப்பான் எல்லோரும் அவனை எதிர்ப்பார்கள். தன் உறவினருக்கு எதிரியாக அவன் வாழ்வான்” என்றார்.
13 அப்பொழுது, ‘என்னைக் காண்பவரை நானும் இங்கே கண்டேன் அல்லவா?’ என்று அவள் சொல்லித் தன்னுடன் பேசிய ஆண்டவரை, ‘காண்கின்ற இறைவன் நீர்’ என்று பெயரிட்டழைத்தாள்.
14 ஆகவே, அந்தக் கிணற்றிற்கு ‘பெயேர் லகாய்ரோயி’* என்ற பெயர் வழங்கலாயிற்று. அது காதேசுக்கும் பெரேதுக்கும் இடையே இருக்கின்றது.
15 ஆகார் ஆபிராமுக்கு மகன் ஒருவனைப் பெற்றெடுத்தாள். ஆகார் பெற்ற தம் மகனுக்கு ஆபிராம் ‘இஸ்மயேல்’ என்று பெயரிட்டார்.
16 ஆகார் ஆபிராமுக்கு இஸ்மயேலைப் பெற்றெடுத்த பொழுது அவருக்கு வயது எண்பத்தாறு.
16:15 கலா 4:22.
16:14 எபிரேயத்தில், ‘என்னைக் காண்கின்ற வாழ்பவரின் கிணறு’ என்பது பொருள். | https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-16 |
16 | தொடக்கநூல் | தொடக்கநூல் அதிகாரம் – 17 – திருவிவிலியம் | ஆபிரகாமுடன் கடவுளின் உடன்படிக்கை-விருத்தசேதனம்
1 ஆபிராமுக்கு வயது தொண்ணூற்றொன்பதாக இருந்தபொழுது, ஆண்டவர் அவருக்குத் தோன்றி, “நான் எல்லாம் வல்ல இறைவன். எனக்குப் பணிந்து நடந்து, மாசற்றவனாய் இரு.
2 உனக்கும் எனக்குமிடையே ஓர் உடன்படிக்கையை நான் ஏற்படுத்திக்கொள்வேன்; உன்னை மிகமிகப் பெருகச் செய்வேன்” என்றார்.
3 அப்பொழுது ஆபிராம் பணிந்து வணங்க, கடவுள் அவரிடம் கூறியது:
4 “உன்னுடன் நான் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே: எண்ணற்ற நாடுகளுக்கு நீ தந்தை ஆவாய்.
5 இனி உன்பெயர் ஆபிராம் அன்று; ‘ஆபிரகாம்’ என்ற பெயரால் நீ அழைக்கப்படுவாய். ஏனெனில், எண்ணற்ற நாடுகளுக்கு உன்னை நான் மூதாதையாக்குகிறேன்.
6 மிகப் பெருமளவில் உன்னைப் பலுகச் செய்வேன்; உன்னிடமிருந்து நாடுகளை உண்டாக்குவேன். உன்னிடமிருந்து அரசர்கள் தோன்றுவர்.
7 தலைமுறை தலைமுறையாக உன்னுடனும், உனக்குப்பின் வரும் உன் வழிமரபினருடனும் என்றுமுள்ள உடன்படிக்கையை நான் நிலைநாட்டுவேன். இதனால் உனக்கும் உனக்குப்பின் வரும் உன் வழிமரபினருக்கும் நான் கடவுளாக இருப்பேன்.
8 நீ தங்கியிருக்கும் நாட்டையும் கானான் நாடு முழுவதையும் என்றுமுள்ள உரிமைச் சொத்தாக உனக்கும் உனக்குப்பின் உன் வழி மரபினருக்கும் வழங்குவேன். நான் அவர்களுக்குக் கடவுளாக இருப்பேன்” என்றார்.
9 மீண்டும் கடவுள் ஆபிரகாமிடம், “நீயும் தலைமுறைதோறும் உனக்குப்பின் வரும் உன் வழிமரபினரும் என் உடன்படிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
10 நீங்கள் கடைப்பிடிக்குமாறு உன்னோடும் உனக்குப்பின் வரும் உன் வழிமரபினரோடும் நான் செய்து கொள்ளும் உடன்படிக்கை இதுவே: உங்களுள் ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும்.
11 உங்கள் உடலில் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். இதுவே உங்களுக்கும் எனக்குமிடையே உள்ள உடன்படிக்கையின் அடையாளம்.
12 தலைமுறை தலைமுறையாக எட்டு நாள் ஆன உங்கள் ஆண்குழந்தை ஒவ்வொன்றுக்கும் நீங்கள் விருத்தசேதனம் செய்ய வேண்டும். அக்குழந்தை வீட்டில் பிறந்திருந்தாலும், உன் வழிமரபைச் சாராமல் வேற்றினத்தாரிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்டிருந்தாலும், அப்படியே செய்ய வேண்டும்.
13 உன்வீட்டில் பிறந்த குழந்தைக்கும் விலைக்கு வாங்கியதற்கும் கண்டிப்பாக விருத்தசேதனம் செய்ய வேண்டும். இவ்வாறு, என் உடன்படிக்கை உன் உடலில் என்றுமுள்ள உடன்படிக்கையாக இருக்கும்.
14 தன் உடலில் விருத்தசேதனம் செய்யப்படாத எந்த ஆண்மகனும், என் உடன்படிக்கையை மீறியதால், தன் இனத்தாரிடமிருந்து விலக்கப்படுவான்” என்றார்.
15 பின்பு, கடவுள் ஆபிரகாமிடம், “உன் மனைவியைச் ‘சாராய்’ என அழைக்காதே. இனிச் ‘சாரா’ என்பதே அவள் பெயர்.
16 அவளுக்கு ஆசி வழங்குவேன். அவள் வழியாக உனக்கு ஒரு மகனையும் தருவேன். அவளுக்கு நான் ஆசி வழங்க, அவள் வழியாக நாடுகள் தோன்றும். மக்களினங்களுக்கு அரசர்களும் அவளிடமிருந்து உதிப்பர்” என்றார்.
17 ஆபிரகாம் தாள்பணிந்து வணங்கி, நகைத்து, “நூறு வயதிலா எனக்குக் குழந்தை பிறக்கும்? தொண்ணூறு வயது சாராவா குழந்தை பெறப் போகிறாள்?” என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.
18 ஆபிரகாம் கடவுளிடம், “உம் திருமுன் இஸ்மயேல் வாழ்ந்தாலே போதும்” என்றார்.
19 கடவுள் அவரிடம், “அப்படியன்று. உன் மனைவி சாரா உனக்கு ஒரு மகனைப் பெறுவாள். அவனுக்கு நீ ‘ஈசாக்கு’ எனப் பெயரிடுவாய். அவனுடனும் அவனுக்குப்பின் வரும் அவன் வழிமரபினருடனும் என்றுமுள்ள உடன்படிக்கையை நான் நிலைநாட்டுவேன்.
20 இஸ்மயேலைப் பற்றிய உன் வேண்டுதலை நான் கேட்டேன். அவனுக்கு ஆசி வழங்கி, அவனை மிகப்பெருமளவில் பலுகச் செய்வேன். பன்னிரு இளவரசர்களுக்கு அவன் தந்தையாவான்; அவனிடம் இருந்து ஒரு பெரிய நாடு தோன்றும்.
21 ஆனால், சாரா உனக்கு அடுத்த ஆண்டு இதே காலத்தில் பெறப்போகும் ஈசாக்கிடம் என் உடன்படிக்கையை நிலைநாட்டுவேன்” என்றார்.
22 அவருடன் பேசி முடித்தபின், கடவுள் ஆபிரகாமை விட்டுச் சென்றார்.
23 பின்னர், ஆபிரகாம் தம் மகன் இஸ்மயேலுக்கும் தம் வீட்டில் பிறந்த எல்லாருக்கும், தாம் விலைக்கு வாங்கிய எல்லாருக்கும், அதாவது, தம் வீட்டில் இருந்த ஒவ்வொரு ஆணுக்கும், கடவுள் தமக்குக் கூறியபடியே அதே நாளில் அவர்கள் உடலில் விருத்தசேதனம் செய்தார்.
24 ஆபிரகாமுக்கு அவர் உடலில் விருத்தசேதனம் செய்யப்பட்டபொழுது அவருக்கு வயது தொண்ணூற்றொன்பது.
25 அவர் மகன் இஸ்மயேலுக்கு அவன் உடலில் விருத்தசேதனம் செய்யப்பட்டபொழுது, அவனுக்கு வயது பதின்மூன்று.
26 ஆபிரகாமுக்கும் அவர் மகன் இஸ்மயேலுக்கும் ஒரே நாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டது.
27 அவருக்குச் செய்யப்பட்டதுபோல அவர் வீட்டில் பிறந்தவர்கள், வேற்றினத்தாரிடமிருந்து அவர் விலைக்கு வாங்கியவர்கள் ஆகிய எல்லா ஆண்களுக்கும் விருத்தசேதனம் செய்யப்பட்டது.
17:5 உரோ 4:17.
17:7 லூக் 1:55.
17:8 திப 7:5.
17:10 திப 7:8; உரோ 4:11. | https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-17 |
17 | தொடக்கநூல் | தொடக்கநூல் அதிகாரம் – 18 – திருவிவிலியம் | ஆபிரகாமுக்கு மகன் வாக்களிக்கப்பெறல்
1 பின்பு, ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்களருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார். பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில் ஆபிரகாம் தம் கூடார வாயிலில் அமர்ந்திருக்கையில்,
2 கண்களை உயர்த்திப் பார்த்தார்; மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார். அவர்களைக் கண்டவுடன் அவர்களைச் சந்திக்கக் கூடார வாயிலைவிட்டு ஓடினார். அவர்கள்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்கி, அவர்களை நோக்கி,
3 “என் தலைவரே, உம் கண்களில் எனக்கு அருள் கிடைத்ததாயின், நீர் உம் அடியானை விட்டுக் கடந்து போகாதிருப்பீராக!
4 இதோ விரைவில் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும். உங்கள் கால்களைக் கழுவியபின், இம் மரத்தடியில் இளைப்பாறுங்கள்.
5 கொஞ்சம் உணவு கொண்டுவருகிறேன். நீங்கள் புத்துணர்வு பெற்றபின், பயணத்தைத் தொடருங்கள். ஏனெனில், உங்கள் அடியானிடமே வந்திருக்கிறீர்கள்” என்றார். “நீ சொன்னபடியே செய்” என்று அவர்கள் பதில் அளித்தார்கள்.
6 அதைக் கேட்டு ஆபிரகாம் தம் கூடாரத்திற்கு விரைந்து சென்று, சாராவை நோக்கி, “விரைவாக மூன்று மரக்கால்* நல்ல மாவைப் பிசைந்து, அப்பங்கள் சுடு” என்றார்.
7 ஆபிரகாம் மாட்டு மந்தைக்கு ஓடிச்சென்று, ஒரு நல்ல இளங்கன்றைக் கொணர்ந்து வேலைக்காரனிடம் கொடுக்க, அவன் அதனை விரைவில் சமைத்தான்.
8 பிறகு அவர் வெண்ணெய், பால், சமைத்த இளங்கன்று ஆகியவற்றைக் கொண்டுவந்து அவர்கள் முன் வைத்தார். அவர்கள் உண்ணும்பொழுது அவர்களருகே மரத்தடியில் நின்றுகொண்டிருந்தார்.
9 பின்பு, அவர்கள் அவரை நோக்கி, “உன் மனைவி சாரா எங்கே?” என்று கேட்க, அவர், “அதோ கூடாரத்தில் இருக்கிறாள்” என்று பதில் கூறினார்.
10 அப்பொழுது ஆண்டவர்; “நான் இளவேனிற் காலத்தில் உறுதியாக மீண்டும் உன்னிடம் வருவேன். அப்பொழுது உன் மனைவி சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்” என்றார். அவருக்குப் பின்புறத்தில் கூடார வாயிலில் சாரா இதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
11 ஆபிரகாமும் சாராவும் வயது முதிர்ந்தவர்களாய் இருந்தனர். சாராவுக்கு மாதவிடாய் நின்று போயிருந்தது.
12 எனவே, சாரா தமக்குள் சிரித்து, “நானோ கிழவி; என் தலைவரோ வயது முதிர்ந்தவர். எனக்கா இன்பம்?” என்றாள்.
13 அப்போது ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, “‘நான் வயது முதிர்ந்தவளாய் இருக்க, எனக்கு உண்மையில் பிள்ளை பிறக்குமா’ என்று சொல்லி சாரா ஏன் இப்படிச் சிரித்தாள்? ஆண்டவரால் ஆகாதது எதுவும் உண்டோ!
14 இளவேனிற்காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் நான் உன்னிடம் மீண்டும் வருவேன். அப்பொழுது சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்” என்று சொன்னார்.
15 சாராவோ, “நான் சிரிக்கவில்லை” என்று சொல்லி மறுத்தார். ஏனெனில், அச்சம் அவரை ஆட்கொண்டது. அதற்கு ஆண்டவர், “இல்லை, நீ சிரித்தாய்” என்றார்.
சோதோமுக்காக ஆபிரகாம் மன்றாடல்
16 அந்த மனிதர்கள் எழுந்து, அவ்விடம் விட்டுச் சோதோமை நோக்கிச் சென்றார்கள். ஆபிரகாமும் உடன்சென்று அவர்களை வழியனுப்பினார்.
17 அப்பொழுது ஆண்டவர், “நான் செய்யவிருப்பதை ஆபிரகாமிடமிருந்து மறைப்பேனா?
18 ஆபிரகாமிடமிருந்தே வலிமைமிக்க மாபெரும் இனம் தோன்றும். அவன் மூலம் மண்ணுலகின் எல்லா இனத்தாரும் ஆசி பெற்றுக் கொள்வர்.
19 ஏனெனில், நீதி, நேர்மை வழி நின்று எனக்குக் கீழ்ப்படியும்படி தன் புதல்வருக்கும், தனக்குப்பின் தன் வழிமரபினருக்கும் கற்றுத்தருமாறு ஆண்டவராகிய நான் ஆபிரகாமுக்கு வாக்களித்ததை அவன் நிறைவேற்றுவான்” என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.
20 ஆதலால், ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, “சோதோம் கொமோராவுக்கு எதிராகப் பெருங்கண்டனக்குரல் எழும்பியுள்ளது. அவற்றின் பாவம் மிகவும் கொடியது.
21 என்னை வந்தடைந்த கண்டனக்குரலின்படி அவர்கள் நடந்து கொண்டார்களா இல்லையா என்று அறிந்து கொள்ள நான் இறங்கிச் சென்று பார்ப்பேன்” என்றார்.
22 அப்பொழுது அந்த மனிதர்கள் அவ்விடத்தை விட்டுச் சோதோமை நோக்கிச் சென்றார்கள். ஆபிரகாமோ ஆண்டவர் திருமுன் நின்று கொண்டிருந்தார்.
23 ஆபிரகாம் அவரை அணுகிக் கூறியதாவது: “தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்து விடுவீரோ?
24 ஒருவேளை நகரில் ஐம்பது நீதிமான்களாவது இருக்கலாம். அப்படியானால் அதிலிருக்கிற ஐம்பது நீதிமான்களை முன்னிட்டாவது அவ்விடத்தைக் காப்பாற்றாமல் அழிப்பீரோ?
25 தீயவனோடு நீதிமானையும் அழிப்பது உமக்கு ஏற்றதன்று; நீதிமானையும் தீயவனையும் சமமாக நடத்துவது உமக்கு உகந்ததன்று. அனைத்துலகிற்கும் நீதி வழங்குபவர் நீதியுடன் தீர்ப்பு வழங்க வேண்டாமோ?” என்றார்.
26 அதற்கு ஆண்டவர், “நான் சோதோம் நகரில் ஐம்பது நீதிமான்கள் இருப்பதாகக் கண்டால், அவர்களின் பொருட்டு முழுவதையும் காப்பாற்றுவேன்” என்றார்.
27 அப்பொழுது ஆபிரகாம் மறுமொழியாக, “தூசியும் சாம்பலுமான நான் என் தலைவரோடு பேசத் துணிந்துவிட்டேன்;
28 ஒருவேளை அந்த ஐம்பது நீதிமான்களில் ஐந்து பேர் குறைவாயிருக்கலாம். ஐந்து பேர் குறைவதை முன்னிட்டு நகர் முழுவதையும் அழிப்பீரோ?” என்றார். அதற்கு அவர், “நான் நாற்பத்தைந்து பேரை அங்கே கண்டால் அழிக்க மாட்டேன்” என்றார்.
29 மீண்டும் அவர், உரையாடலைத் தொடர்ந்து, “ஒருவேளை அங்கே நாற்பது பேர் மட்டும் காணப்பட்டால் என்ன செய்வீர்?” என்று கேட்க, ஆண்டவர், “நாற்பது நீதிமான்களின் பொருட்டு அதனை அழிக்க மாட்டேன்” என்றார்,
30 அப்பொழுது ஆபிரகாம்; “என் தலைவரே, நான் இன்னும் பேச வேண்டும்; சினமடைய வேண்டாம். ஒருவேளை அங்கே முப்பது பேரே காணப்பட்டால்?” என, அவரும் “முப்பது பேர் அங்குக் காணப்பட்டால் அழிக்க மாட்டேன்” என்று பதிலளித்தார்.
31 அவர், “என் தலைவரே, உம்மோடு அடியேன் பேசத்துணிந்து விட்டேன். ஒருவேளை அங்கு இருபது பேரே காணப்பட்டால்?” என, அதற்கு அவர், “இருபது பேரை முன்னிட்டு நான் அழிக்க மாட்டேன்” என்றார்.
32 அதற்கு அவர், “என் தலைவரே, சினமடைய வேண்டாம்; இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் என்னைப் பேசவிடும். ஒரு வேளை அங்குப் பத்துப் பேர் மட்டும் காணப்பட்டால்?” என, அவர், “அந்தப் பத்துப் பேரை முன்னிட்டு அழிக்க மாட்டேன்” என்றார்.
33 ஆபிரகாமோடு பேசி முடித்தபின் ஆண்டவர் அவரை விட்டுச்சென்றார். ஆபிரகாமும் தம் இடத்திற்குத் திரும்பிச் சென்றார்.
18:2 எபி 13:2.
18:10 உரோ 9:9.
18:12 1 பேது 3:6.
18:13 லூக் 1:37.
18:6 ‘செயா’ என்பது எபிரேய பாடம். | https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-18 |
18 | தொடக்கநூல் | தொடக்கநூல் அதிகாரம் – 19 – திருவிவிலியம் | சோதோமின் தீச்செயல்
1 மாலை வேளையில் ஆண்டவரின் தூதர் இருவர் சோதோமுக்கு வந்தனர். அப்பொழுது நகரின் நுழை வாயிலில் லோத்து உட்கார்ந்திருந்தார். அவர் அவர்களைக் கண்டவுடன் எழுந்து சந்திக்கச் சென்று தரைமட்டும் தாழ்ந்து அவர்களை வணங்கினார்.
2 பிறகு, “என் தலைவர்களே, அருள்கூர்ந்து உங்கள் அடியானின் இல்லத்திற்கு வாருங்கள். உங்கள் கால்களைக் கழுவி, இரவு தங்குங்கள். காலையில் எழுந்து உங்கள் வழிப்பயணத்தைத் தொடருங்கள்” என்று சொன்னார். அவர்களோ, “வேண்டாம், பொதுவிடத்தில் நாங்கள் இரவு தங்குவோம்” என்று மறுமொழி சொன்னார்கள்.
3 அவர் அவர்களை மிகவும் வற்புறுத்தவே, அவர்களும் உடன் சென்று அவரது இல்லத்தினுள் நுழைந்தார்கள். அவர் புளிப்பற்ற அப்பம் சுட்டு அவர்களுக்கு விருந்தளிக்க, அவர்களும் உண்டார்கள்.
4 பின் அவர்கள் உறங்கச் செல்லுமுன், சோதோம் நகரின் மக்களுள் இளைஞர் முதல் கிழவர் ஈறாக எல்லா ஆண்களும் அவ்வீட்டைச் சூழ்ந்து கொண்டனர்.
5 பிறகு, லோத்தைக் கூப்பிட்டு, “இன்று இரவு உன்னிடம் வந்த ஆடவர் எங்கே? நாங்கள் அவர்களோடு உறவு கொள்ளுமாறு அவர்களை எங்களிடம் கொண்டு வா” என்றனர்.
6 லோத்து வீட்டிற்கு வெளியே வந்து, தனக்குப் பின் கதவை மூடிக்கொண்டு,
7 “என் சகோதரரே, தீச்செயல் செய்யாதிருங்கள்.
8 “ஆண் தொடர்பு அறியாத புதல்வியர் இருவர் எனக்கு உள்ளனர். உங்களிடம் நான் அவர்களை அழைத்து வருகிறேன். உங்கள் விருப்பப்படி அவர்களுடன் நடந்து கொள்ளலாம். ஆனால், எனது இல்லத்தின் பாதுகாப்பைப் பெற்றிருக்கும் இந்த ஆடவர்களுக்கு எதுவும் செய்ய வேண்டாம்” என்றார்.
9 அதற்கு அவர்களோ, “அப்பாலே போ” என்றனர். மேலும், அவர்கள் “அயல்நாட்டிலிருந்து வந்த இவனா நமக்கு நியாயம் கூறுவது?” என்று சொல்லிக்கொண்டு, “அவர்களுக்குச் செய்யவிருப்பதைவிட இப்பொழுது உனக்கு அதிகத் தீங்கு செய்வோம்” என்றனர். பிறகு, லோத்தைக் கடுமையாய்த் தாக்கிக் கதவை உடைக்க நெருங்கிச் சென்றனர்.
10 அவ்வேளையில் அந்த ஆடவர் தம் கைகளை நீட்டி லோத்தைப் பிடித்து வீட்டுக்குள் இழுத்துக் கதவைப் பூட்டிக் கொண்டனர்.
11 கதவருகே நின்று கொண்டிருந்த சிறியோர், பெரியோர்களாகிய அம்மனிதர்களை அவர்கள் குருடராக்கினர். அவர்களால் கதவைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை
சோதோமை விட்டு லோத்து வெளியேறல்
12 மேலும், அந்த மனிதர்கள் லோத்தை நோக்கி: “இங்கே உன்னைச் சார்ந்த வேறு யாரேனும் உளரோ? மருமகனோ, புதல்வரோ, புதல்வியரோ உன்னைச் சார்ந்த வேறு யாரேனும் இந்நகரில் இருந்தால், அவர்களை இவ்விடத்திலிருந்து உன்னுடன் அழைத்துக் கொண்டு போய்விடு.
13 இந்த இடத்தின் மக்களுக்கு எதிராகப் பெருங்கண்டனக்குரல் ஆண்டவர் திருமுன் எழுந்துள்ளதால், நாங்கள் இந்த இடத்தை அழிக்கும்படி எங்களை அவர் அனுப்பியுள்ளார்” என்றனர்.
14 உடனே லோத்து வெளியே போய்த் தம் புதல்வியருக்கு மண ஒப்பந்தமாகியிருந்த மருமக்களோடு பேசி, “நீங்கள் எழுந்து இவ்விடத்தை விட்டுப் புறப்படுங்கள். ஏனெனில், ஆண்டவர் இந்நகரை அழிக்கப் போகிறார்” என்றார். அவருடைய மருமக்களுக்கு இது நகைப்புக்குரியதாய்த் தோன்றியது.
15 பொழுது விடியும் வேளையில் தூதர்கள் லோத்தை நோக்கி, “நீ எழுந்திரு! உன் மனைவியையும், உன் இரு புதல்வியரையும் கூட்டிக்கொண்டு போ! இல்லையேல், இந்நகரின் தண்டனைத் தீர்ப்பில் நீயும் அகப்பட்டு அழிவாய்” என்று வற்புறுத்திக் கூறினார்கள்.
16 அவர் காலந்தாழ்த்தினார். ஆண்டவர் அவர் மீது இரக்கம் வைத்திருந்ததால், அந்த மனிதர்கள் அவரது கையையும், அவர் மனைவியின் கையையும், அவர் இரு புதல்வியர் கையையும் பிடித்துக் கொண்டுபோய் நகருக்கு வெளியே விட்டார்கள்.
17 அவர்களை வெளியே அழைத்து வந்தவுடன் அந்த மனிதர்கள் அவரை நோக்கி, “நீ உயிர்தப்புமாறு ஓடிப்போ; திரும்பிப் பார்க்காதே; சமவெளி எங்கேயும் தங்காதே; மலையை நோக்கித் தப்பி ஓடு; இல்லையேல் அழிந்து போவாய்” என்றார்கள்.
18 லோத்து அவர்களை நோக்கி: “என் தலைவர்களே, வேண்டாம்.
19 உங்கள் அடியானுக்கு உங்கள் பார்வையில் இரக்கம் கிடைத்துள்ளது. என் உயிரைக் காக்கும் பொருட்டு நீர் காட்டிய பேரன்பு உயர்ந்தது. ஆயினும், மலையை நோக்கித் தப்பியோட என்னால் இயலாது. ஓடினால் தீங்கு ஏற்பட்டு, நான் செத்துப்போவேன்.
20 எனவே, நான் தப்பியோடிச் சேர்வதற்கு வசதியாக, இதோ ஒரு நகர் அருகிலுள்ளது. அது சிறியதாய் இருக்கிறது. அதற்குள் ஓடிப்போக விடுங்கள். அது சிறிய நகர் தானே? நானும் உயிர் பிழைப்பேன்” என்றார்.
21 அதற்கு தூதர் ஒருவர், “நல்லது, அப்படியே ஆகட்டும். இக்காரியத்திலும் உனக்குக் கருணை காட்டியுள்ளேன். நீ கேட்டபடி அந்நகரை நான் அழிக்க மாட்டேன்.
22 நீ அங்கு விரைந்தோடித் தப்பித்துக் கொள். நீ அங்குச் சென்று சேருமட்டும் என்னால் ஒன்றும் செய்ய இயலாது” என்றார். இதனால், அந்த நகருக்குச் ‘சோவார்’* என்னும் பெயர் வழங்கிற்று.
சோதோம், கொமோராவின் அழிவு
23 லோத்து சோவாரை அடைந்த போது கதிரவன் மண்ணுலகின் மேல் உதித்திருந்தான்.
24 அப்பொழுது ஆண்டவர் வானத்திலிருந்து சோதோம், கொமோரா நகர்களின்மேல் கந்தகமும் நெருப்பும் பொழியச் செய்தார்.
25 அந்நகரங்களையும் அவற்றைச் சுற்றியிருந்த சமவெளி முழுவதையும் அழித்தார். நகர்களில் வாழ்ந்த அனைவரையும், நிலத்தில் தளிர்த்தனவற்றையும் அழித்தார்.
26 அப்பொழுது லோத்தின் மனைவி திரும்பிப் பார்த்தாள். உடனே உப்புத்தூணாக மாறினாள்.
27 ஆபிரகாம் காலையில் எழுந்திருந்து, தாம் ஏற்கெனவே ஆண்டவர் திருமுன் நின்ற இடத்திற்குப் போனார்.
28 அவர் சோதோமையும் கொமோராவையும் சூழ்ந்திருந்த நிலப்பகுதியையும் நோக்கிப் பார்த்தபோது சூளையின் புகைபோல நிலப்பரப்பிலிருந்து புகை கிளம்பக் கண்டார்.
29 கடவுள் சமவெளி நகர்களை அழித்தபோது, ஆபிரகாமை நினைவு கூர்ந்தார். எனவே, லோத்து குடியிருந்த நகர்களை அழித்தபோது கடவுள் அவரைக் காப்பாற்றினார்.
மோவாபியர், அம்மோனியரின் தோற்றம்
30 லோத்து சோவாரைவிட்டு வெளியேறி மலைக்குச் சென்று குடியேறினார். சோவாரில் குடியிருக்க அஞ்சியதால் தம் இரு புதல்வியருடன் ஒரு குகையில் வாழ்ந்து வந்தார்.
31 அப்பொழுது மூத்தவள் இளையவளை நோக்கி, “நம் தந்தை வயது முதிர்ந்தவர். உலகெங்கும் உள்ள வழக்கிற்கேற்ப நம்மை மணந்து நம்முடன் உறவு கொள்ளுமாறு இப்பகுதியில் வேறு ஆடவர் எவரும் இல்லை.
32 “வா; நம் தந்தையைத் திராட்சை மது குடிக்க வைத்து, அவருடன் உறவுகொள்வோம். இவ்வாறு நம் தந்தையின் மூலம் வழிமரபைக் காத்துக் கொள்வோம்” என்றாள்.
33 அவ்வாறே, அன்றிரவு தங்கள் தந்தையைத் திராட்சை மது குடிக்கவைத்தார்கள். பிறகு மூத்தவள் உள்ளே நுழைந்து தன் தந்தையுடன் படுத்துக் கொண்டதோ, அவள் எழுந்து சென்றதோ அவருக்குத் தெரியாது.
34 மறுநாள் மூத்தவள் இளையவளை நோக்கி, “நேற்றிரவு என் தந்தையோடு நான் படுத்துக்கொண்டேன். இன்றிரவும் அவ்வாறே அவரைத் திராட்சை மது குடிக்கவைப்போம். நீ சென்று அவருடன் படுத்துக்கொள். இவ்வண்ணமாக நம் தந்தையின் மூலம் வழிமரபைக் காத்துக்கொள்வோம்” என்றாள்.
35 அவ்வாறே, அன்றிரவும் தங்கள் தந்தையைத் திராட்சை மது குடிக்க வைத்தார்கள். இம்முறையும் இளையவள் சென்று படுத்துக்கொண்டதோ அவள் எழுந்து சென்றதோ அவருக்குத் தெரியாது.
36 இவ்வாறு, லோத்தின் புதல்வியர் இருவரும் தம் தந்தையின் மூலம் கருத்தரித்தனர்.
37 பின் மூத்தவள் ஒரு மகனைப் பெற்று அவனுக்கு ‘மோவாபு’* என்று பெயரிட்டாள். அவன் இன்றுவரை இருக்கிற மோவாபியருக்குத் தந்தை.
38 இளையவள் ஒரு மகனைப் பெற்று, அவனுக்குப் ‘பென் அம்மி’* என்னும் பெயரைச் சூட்டினாள். அவன் இன்றுவரை இருக்கிற அம்மோனியரின் தந்தை.
19:5-8 நீதி 19:22-24.
19:11 2 அர 6:18.
19:16 2 பேது 2:7.
19:24-25 மத் 10:15; 11:23-24; லூக் 10:12; 17:29; 2 பேது 2:6; யூதா 7.
19:26 லூக் 17:32.
19:22 எபிரேயத்தில், ‘சிறியது’ என்பது பொருள்.
19:37 எபிரேயத்தில், ‘தந்தையின் மூலமாக’ என்பது பொருள்.
19:38 எபிரேயத்தில், ‘என் இனத்தின் மகன்’ என்பது பொருள். | https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-19 |
19 | தொடக்கநூல் | தொடக்கநூல் அதிகாரம் – 20 – திருவிவிலியம் | ஆபிரகாமும் அபிமெலக்கும்
1 ஆபிரகாம் அங்கிருந்து புறப்பட்டு நெகேபுக்குச் சென்று காதேசுக்கும் சூருக்கும் இடைப்பட்ட பகுதியில் வாழ்ந்து, பின்னர் கெராரில் தங்கினார்.
2 அப்போது ஆபிரகாம் தம் மனைவி சாராவைத் தம் சகோதரி என்று சொல்லிக் கொண்டமையால், கெரார் மன்னனாகிய அபிமெலக்கு ஆளனுப்பி அவரை அழைத்துவரச் செய்தான்.
3 இரவில் ஆண்டவர் அபிமெலக்குக்குக் கனவில் தோன்றி, “இதோ, நீ அழைத்துவரச் செய்த பெண்ணின் பொருட்டு நீ சாகப் போகிறாய். ஏனெனில் ,அவள் ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டவள்” என்று அவனிடம் கூறினார்.
4 அதுவரை அவரைத் தொடாதிருந்த அபிமெலக்கு அது கேட்டு மறுமொழியாக, “என் தலைவரே, உண்மையாகவே நேர்மைமிக்க இனத்தவரை நீர் அழிப்பீரோ?
5 அவன் அவளைத் தன் சகோதரி என்றும் அவள் அவனைத் தன் சகோதரன் என்றும் அறிமுகப்படுத்தவில்லையா? நான் நேரிய இதயத்தோடும் தூய கைகளோடும் இதைச் செய்தேன்” என்றான்.
6 கடவுள், கனவில் தோன்றி, அவனை நோக்கி, “நீ நேரிய இதயத்தோடு அப்படிச் செய்தாயென்று அறிவேன். அதனால்தான் எனக்கு எதிராகப் பாவம் செய்யாத உன்னைக் காப்பாற்றி, அவளைத் தொடவிடவில்லை.
7 உடனே அந்தப் பெண்ணை அவளின் கணவனிடம் அனுப்பிவிடு. ஏனெனில், அவன் ஓர் இறைவாக்கினன். அவன் உனக்காக மன்றாடினால் நீ பிழைப்பாய். அவளை நீ அனுப்பாவிடில் நீயும் உன்னைச் சேர்ந்த யாவரும் செத்து மடிவீர்கள் என்பது உறுதி” என்றார்.
8 அபிமெலக்கு அதிகாலையில் எழுந்து தன் வேலைக்காரர் அனைவரையும் அழைத்து, அந்த வார்த்தைகளை எல்லாம் அவர்கள் கேட்கும்படி சொன்னான். அதைக் கேட்டு அவர்கள் மிகவும் அச்சமுற்றனர்.
9 பின் அபிமெலக்கு ஆபிரகாமை வரவழைத்து, “நீர் எங்களுக்கு என்ன காரியம் செய்து விட்டீர்? எனக்கும் என் நாட்டுக்கும் இப்பெரும் பழி நேரும்படி நான் உமக்கு என்ன தீங்கு செய்தேன்? செய்திருக்கக் கூடாதவற்றை நீர் எனக்குச் செய்துவிட்டீரே!
10 நீர் எக்காரணத்தைக் கொண்டு இக்காரியம் செய்தீர்?” என்ற அவரிடம் வினவினான்.
11 ஆபிரகாம் மறுமொழியாக, “இவ்விடத்தில் கடவுளுக்கு அஞ்சுவார் எவரும் இல்லையென்றும் என் மனைவியை அடையும்பொருட்டு என்னைக் கொன்று விடுவார்கள் என்றும் நினைத்தேன்.
12 மேலும், உண்மையில் இவள் என் சகோதரியே; இவள் என் தந்தைக்குப் பிறந்த மகள். ஆனால், என் தாயின் மகள் அல்ல; அவளை நான் மணந்து கொண்டேன்.
13 மேலும், நான் என் தந்தையின் வீட்டைவிட்டுக் கடவுள் என்னை அலைந்து திரியச் செய்தபோது, ‘நீ எனக்குப் பேருதவி செய்ய வேண்டும்; நாம் செல்லுமிடமெல்லாம், நான் உன் சகோதரன் என்று சொல்’ என்று அவளிடம் நான் கூறியிருந்தேன்” என்றார்.
14 அப்பொழுது அபிமெலக்கு ஆடு மாடுகளையும், வேலைக்காரர், வேலைக்காரிகளையும் ஆபிரகாமுக்குக் கொடுத்ததுமன்றி, அவர் மனைவி சாராவையும் அவரிடம் ஒப்படைத்தான்.
15 மேலும், அபிமெலக்கு, “இதோ உமக்கு முன்பாக எனது நாடு இருக்கிறது. உமக்கு எங்கு விருப்பமோ அங்கு நீர் வாழலாம்” என்றான்.
16 மேலும், சாராவை நோக்கி, “இதோ உன் சகோதரருக்கு ஆயிரம் வெள்ளிக்காசு கொடுத்துள்ளேன். உன்னோடு இருப்பவர்களின் பார்வையிலிருந்து அது மறைக்கும் திரையாக அமையட்டும். அனைவர் பார்வையிலும் உன் பழி நீங்கிவிட்டது” என்றான்.
17 ஆபிரகாம் கடவுளிடம் மன்றாடவே, கடவுளும் அபிமெலக்கையும் அவன் மனைவியையும் அடிமைப் பெண்களையும் குணமாக்கி அவர்களுக்குப் பிள்ளைப்பேறு அளித்தார்.
18 ஏனென்றால், ஆபிரகாமின் மனைவி சாராவை முன்னிட்டு ஆண்டவர் அபிமெலக்கு வீட்டிலிருந்த பெண்களை மலடிகளாக்கியிருந்தார்.
20:2 தொநூ 12:13; 26:7. | https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-20 |
End of preview. Expand
in Dataset Viewer.
Full Bible Chapter wise - Tamil
Web Scrapped from https://bible.catholicgallery.org/ecu-tamil/
- Downloads last month
- 31